Published : 02 Aug 2014 10:00 AM
Last Updated : 02 Aug 2014 10:00 AM

3-வது டெஸ்டில் தோல்வி: இந்திய அணி மீது கவாஸ்கர் சாடல்

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோற்றதற்கு லார்ட்ஸ் டெஸ்டில் பெற்ற வெற்றியால் ஏற்பட்ட வழக்கமான மிதப்பே காரணம் என முன்னாள் இந்திய கேப்டன் சுநீல் கவாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, லார்ட்ஸில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்ட நிலையில், 3-வது டெஸ்ட் போட்டியில் 266 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் படுதோல்வி கண்டது.

இது தொடர்பாக இந்திய அணி மீது கடுமையாகச் சாடியுள்ள கவாஸ்கர் மேலும் கூறியிருப்பதாவது:

லார்ட்ஸில் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணியை முற்றிலுமாக நம்பிக்கை இழக்க வைத்தோம். ஆனால் 3-வது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முந்தைய 5 நாள்கள் இந்திய அணியினர் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை.

3-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் முதல் செசனில் இந்திய வீரர்கள் கவனக்குறைவாக விளையாடினார்கள். இங்கிலாந்து கேப்டன் குக்கின் கேட்ச்சை கோட்டைவிட்டதால், அவர் 95 ரன்கள் குவித்து தனது அணிக்கு வலு சேர்த்தார். ஸ்லிப் திசை பீல்டிங் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து நாம் ஆராய வேண்டும். பீல்டிங் முற்றிலும் மோசமாக அமைந்தது.

முந்தைய போட்டிகளில் பெற்ற வெற்றியின் மிதப்பால் இந்திய அணி அடுத்த போட்டியில் தோற்பது என்பது 1930-களில் இருந்தே வழக்கத்தில் உள்ளது. ஆனால் இப்போதைய இந்திய அணி மிகச்சிறந்த தொழில்முறை அணி. இந்த அணி வெற்றியின் மிதப்பால் பாதிப்புக்குள்ளாகக்கூடாது. இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றார்.

3-வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் இந்திய பேட்ஸ்மேன்கள், இங்கிலாந்து பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வேகமாக சரிவுக்குள்ளானது குறித்துப் பேசிய கவாஸ்கர், “இதுபோன்ற தோல்வி, இந்திய அணியின் சமாளிக்கும் திறன் பூஜ்யம் என்பதையே காட்டுகிறது. ரஹானேவைத் தவிர யாரும் களத்தில் நிலைத்து நிற்கவில்லை. அதேநேரத்தில் ஆண்டர்சன் மிக அற்புதமாக பந்துவீசினார். தலைசிறந்த இந்திய பேட்ஸ்மேன்கள் வேகமாக விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்திய அணி முற்றிலும்செயலிழந்துபோனது ஏமாற்றமளிக்கிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x