

இந்திய ஒருநாள் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரை வலுப்படுத்துவதற்காக 4ம் நிலையில் உறுதி செய்யப்பட்ட அம்பதி ராயுடு முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அதாவது, ஒருநாள், டி20 போட்டிகளில் அதிக கவனம் செலுத்தும் விதமாக அதிகநாள் ஆடப்படும் கிரிக்கெட் வடிவத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தார்.
33 வயதான அம்பதி ராயுடு ஹைதரபாத் அணியின் கேட்பனுமாவார். இவரது திடீர் ஓய்வு குறித்து ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அம்பதி ராயுடு, ஹைதராபாத் கேப்டன் மற்றும் இந்திய ஒருநாள் அணி வீரர், ரஞ்சி டிராபி அதிகநாள் ஆடப்படும் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆடுவார்.
அவர் தொடர்ந்து சர்வதேச போட்டிகளிலும் உள்நாட்டு ஒருநாள் டி20 போட்டிகளிலும் ஆடுவார். அவர் ஹைதராபாத், விதர்பா, பரோடா, ஆந்திரா கிரிக்கெட் சங்கங்களுக்குத் தன் நன்றியைத் தெரிவித்துள்ளார். என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ராயுடு மீது இந்திய ஒருநாள் அணியில் 4ம் நிலை என்ற பொறுப்புள்ள டவுன் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாலும் உலகக்கோப்பையில் இவர் அந்த இடத்தில் ஆடுவார் என்பதாலும் குறுகிய வடிவ கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்த விரும்பி இந்த முடிவை எடுத்துள்ளார்.
இனி இந்திய டெஸ்ட் அணியில் எப்படியிருந்தாலும் இவருக்கு வாய்ப்புக் கிடைக்காது. 17 ஆண்டுகால முதல்தர கிரிக்கெட்டில் 97 போட்டிகளில் 6151 ரன்கள் எடுத்துள்ளார் இதில் 16 சதங்களுடன் 45.56 சராசரி வைத்துள்ளார், அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் 210.
ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ராயுடு 45 போட்டிகளில் 1447 ரன்களை 51.67 என்ற சராசரியில் எடுத்திருப்பதால் இதில் இன்னும் சில ஆண்டுகள் அவர் ஆட வாய்ப்புள்ளது.