Last Updated : 10 Nov, 2018 02:11 PM

 

Published : 10 Nov 2018 02:11 PM
Last Updated : 10 Nov 2018 02:11 PM

டி20 உலகக் கோப்பை: ஹர்மன்பிரீத் வரலாற்று சதம்; முதல் போட்டியில் இந்திய அணி ‘மைல்கல் வெற்றி’

கயானாவில் நேற்று நடந்த மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியை 34 ரன்கள் வீழ்த்தியது இந்திய அணி.இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் டி20 போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையுடன் உலக சாதனை படைத்தார்.

மேற்கிந்தியத் தீவுகளில் மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டி நடந்து வருகிறது. கயானாவில் நேற்று நடந்த பி பிரிவு லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்திய மகளிர் அணி மோதியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் கவுர் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் சேர்த்தது. ஒரு கட்டத்தில் 40 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. 4-வது விக்கெட்டுக்கு ஹர்மன்பிரீத் கவுர், ரோட்ரிக்ஸ் கூட்டணி அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள்.

இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 33 பந்துகளில் அரை சதத்தையும், 49 பந்துகளில் சதத்தையும் நிறைவு செய்தார். 33 பந்துகளில் அரை சதம் அடித்த கவுர், அடுத்த 16 பந்துகளில் அரை சதம் அடித்தார். ரோட்ரிக்ஸ் 39 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

அதிரடியாக பேட் செய்த ஹர்மன்பிரீத் கவுர் 51 பந்துகளில் 103 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 8 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் மகளிர் டி20 போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை எனும் பெருமையை ஹர்மன்பிரீத் பெற்று சாதனை படைத்தார்.

4-வது விக்கெட்டுக்கு இருவரும் 134 ரன்கள் சேர்த்தனர். ரோட்ரிக்ஸ் 59 ரன்களில் ஆட்டமிழந்தார்.

20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 194 ரன்கள் சேர்த்தது. டி20 போட்டியில் இந்திய மகளிர் அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். சர்வதேச அளவில் 2-வது அதிகபட்ச ஸ்கோரை இந்திய அணி நேற்று எடுத்தது.

195 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் மட்டுமே சேர்த்து 34 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்திய அணி தரப்பில் பூனம் யாதவ், ஹேமலதா தலா 3 விக்கெட்டுகளையும், யாதவ் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இந்திய மகளிர் அணி படைத்த சாதனைகள்

1. டி20 உலகக்கோப்பைப் போட்டியில் சதம் அடித்த 3-வது வீராங்கனை எனும் சாதனையை இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் படைத்தார். இதற்கு முன் ஆஸ்திரேலிய வீராங்கனை மெக் லானிங், மே.இ.தீவுகள் வீராங்கனை டியேந்திரா டாட்டின் ஆகியோர் சதம் அடித்துள்ளனர்.

2. இந்திய அணி சார்பில் டி20 உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர். இதற்கு முன் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் (97) மலேசியாவுக்கு எதிராகச் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது.

3. இந்தப் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் 8 சிக்ஸர்கள் அடித்து டி20 போட்டியில் அதிகமான சிஸ்கர்கள் அடித்த 2-வது வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றார். இதற்கு முன் மே.இ.தீவுகள் வீராங்கனை டாட்டின் 9 சிக்ஸர்கள் அடித்திருந்தார்.

4. இந்திய அணி 194 ரன்கள் சேர்த்ததுதான் டி20 உலகக் கோப்பை போட்டியில் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன் அயர்லாந்துக்கு எதிராக 191 ரன்களை ஆஸ்திரேலிய அணி சேர்த்தே அதிகபட்சமாக இருந்தது. மேலும், இந்திய அணி டி20 போட்டியில் எடுத்த 2-வது அதிகபட்சமாகும். இதற்கு முன் கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக 198 ரன்கள் இந்திய மகளிர் அணி சேர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x