

வங்கதேசம் சிட்டகாங்கில் உள்ள ஸாஹூர் அகமட் ஸ்டேடியத்தில் மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 2ம் நாளான இன்று சற்று முன் 324 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் வங்கதேச வீரர் மோமினுல் ஹக் 120 ரன்களை எடுத்தார். மொத்தம் 167 பந்துகளைச் சந்தித்த மோமினுல், 10 பவுண்டரிகள் 1 சிக்சரையும் அடித்தார்.
மோமினுல் ஹக்கின் இந்தச் சதம் இதே மைதானத்தில் அவர் ஆடிய 8 டெஸ்ட் போட்டிகளில் 6வது சதமாகும். கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் மகேலா ஜெயவர்தனே இதை விட அதிக சதங்களை அடித்துள்ளார். ஆயினும் ஒரே மைதானத்தில் 6 அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை எடுத்த 10வது பேட்ஸ்மென் ஆவார் மோமினுல் ஹக்.
இந்த மைதானம் மோமினுல் ஹக்கின் கோட்டையாகிவிட்டது. ஒரே மைதானத்தில் 2 சதங்களைத்தான் வங்கதேச வீரர்கள் அடித்துள்ளனர்.
இந்தச் சாதனை பற்றி மோமினுல் ஹக் ஆட்டமிழந்த பிறகு கேட்ட போது, ‘நான் இந்த ஸ்டேடியத்தில் இறங்கியவுடன் சதம் அடிப்பேன் என்ற எண்ணத்துடனெல்லாம் இறங்குவதில்லை. நான் உண்மையில் இதுபற்றியெல்லாம் யோசிப்பதேயில்லை. எனவே இது குறித்த கேள்விக்கு என்னிடம் விடையில்லை’ என்றார் தன்னடக்கமாக.
மே.இ.தீவுகள் பந்து வீச்சு நன்றாக அமைந்தது, இதனால்தன இந்த மோமினுல் சதம் தரமான சதமாகும். கேப்ரியல் பந்து வீச்சை நன்றாகக் கையாண்டார் மோமினுல், கிமார் ரோச்சை நிறுத்தி நிதானமாக ஆடினார். ராஸ்டன் சேஸ், தேவேந்திர பிஷூ தவறுகள் செய்த போது ரன்களை குவித்தார்.
சதத்தை பவுண்டரியில் எட்டிய போது அதிக டெஸ்ட் சதங்களுக்கான வங்கதேச சாதனையை சமன் செய்தார், தமிம் இக்பாலும் 8 சதங்கள்தான், இவரும் 8 சதங்கள்தான். விராட் கோலி போலவே 2018-ல் மோமினுல் ஹக்கின் 4வது சதமாகும் இது. இதிலும் தமீமின் 3 சத சாதனையை உடைத்தார் மோமினுல் ஹக்.
நியூஸி.க்கு எதிராக 2013-ல் மோமினுல் ஹக் 181 ரன்கள் எடுத்தது இவரது சிறந்த இன்னிங்ஸ் ஆகும். கடினமான தென் ஆப்பிரிக்காவிலும் மோமினுல் ஹக் நன்றாகவே ஆடினார், ஆகவே வங்கதேச அணியில் இவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் என்பதில் ஐயமில்லை.