Published : 07 Aug 2014 10:00 AM
Last Updated : 07 Aug 2014 10:00 AM

4-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: தோல்வியில் இருந்து மீளுமா இந்தியா?

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இன்று தொடங்குகிறது.

கடந்த போட்டியில் 266 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்ட இந்திய அணி, அதிலிருந்து மீள வேண்டிய கட்டாயத்திலும், 10 போட்டிகளுக்குப் பிறகு மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியிருக்கும் இங்கிலாந்து, வெற்றியைத் தொடரும் முனைப்பிலும் களம் காணுகின்றன.

இந்திய அணி கடந்த போட்டியில் 7 பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கியபோதும் இரு இன்னிங்ஸ்களிலும் முறையே 330 மற்றும் 178 ரன்களுக்கு சுருண்டது. அதேநேரத்தில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 569 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்தியாவின் பந்துவீச்சு எடுபடாமல் போனது.

அஸ்வினுக்கு வாய்ப்பு

4-வது போட்டியைப் பொறுத்தவரையில் இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரில் இதுவரை ஒரு போட்டியில்கூட ஆடாத சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் களமிறக்கப்படுவார் என தெரிகிறது. அவர் களமிறங்கும்பட்சத்தில் ரவீந்திர ஜடேஜா அல்லது ரோஹித் சர்மா நீக்கப்படலாம். கடந்த ஆட்டத்தில் மோசமான ஷாட்களை கையாண்ட ரோஹித் சர்மா நீக்கப்படவே அதிக வாய்ப்புள்ளது.

இதேபோல் பேட்டிங்கில் மட்டுமின்றி பீல்டிங்கிலும் தடுமாறி வரும் ஷிகர் தவன் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக கௌதம் கம்பீர் சேர்க்கப்படலாம். ஒரு வேளை ரோஹித் சர்மா நீக்கப்படாத பட்சத்தில் ஷிகர் தவனை மட்டும் நீக்கிவிட்டு, அவருக்குப் பதில் அஸ்வின் சேர்க்கப்படலாம். அதேநேரத்தில் கம்பீருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். அப்படியொரு சூழல் ஏற்படும்பட்சத்தில் முரளி விஜயும் புஜாராவும் இணைந்து இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்கலாம்.

தடுமாறும் கோலி, புஜாரா

இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் முரளி விஜய், அஜிங்க்ய ரஹானே ஆகியோர் மட்டுமே நம்பிக்கையளிக்கின்றனர். கேப்டன் தோனி ஓரளவு ஆடி வருகிறார். மிடில் ஆர்டரில் புஜாரா, விராட் கோலி ஆகியோர் தொடர்ந்து மோசமாக ஆடி வருவது கவலையளிப்பதாக உள்ளது. முரளி விஜய், ரஹானே, கோலி, புஜாரா ஆகியோர் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே இந்தியாவின் ரன் குவிப்பு அமையும்.

கவலையளிக்கும் பந்துவீச்சு

கடந்த போட்டியில் இந்தியாவின் பந்துவீச்சு மெச்சும்படியில்லை. புவனேஸ்வர் குமார் உள்ளிட்ட அனைத்து பௌலர்களுமே துல்லியமாக பந்துவீசவில்லை. ஆனால் இவர்களைவிட்டால் வேறு வழியில்லை என்ற நிலையில் உள்ளது இந்தியா. கணுக்காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டுவிட்டதால் புவனேஸ்வர் குமார் இந்த ஆட்டத்தில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அவர் களமிறங்குவது குறித்து டாஸ் போடும் நேரத்திலேயே முடிவு செய்யப்படும்.

கடந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய வேகப்பந்து வீச்சாளர் பங்கஜ் சிங்கிற்கு ஒரு விக்கெட்கூட கிடைக்காமல் போனது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. அதனால் இந்தப் போட்டியில் அவருக்குப் பதிலாக வருண் ஆரோன் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு வேகப்பந்து வீச்சாளராக முகமது சமி களமிறங்குகிறார்.

கடந்த போட்டியில் இந்தியா படுதோல்வி கண்டதற்கு பீல்டிங்கும் ஒரு காரணம். ஸ்லிப் திசையில் கிடைத்த கேட்சுகளையெல்லாம் இந்திய வீரர்கள் கோட்டைவிட்டதால் வாழ்வு பெற்ற இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் வலுவான ஸ்கோரை குவித்தனர். எனவே இந்தப் போட்டியில் இங்கிலாந்துக்கு சவால் அளிக்க இந்தியாவின் பீல்டிங்கில் துல்லியமாக அமைவது அவசியம்.

பார்மில் இங்கிலாந்து

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில் கேப்டன் குக், இயான் பெல் ஆகியோர் மீண்டும் பார்முக்கு திரும்பியிருப்பது அந்த அணியின் மிகப்பெரிய பலமாகும். மிடில் ஆர்டரில் கேரி பேலன்ஸ் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார். இதுதவிர விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் பின்வரிசை பேட்டிங்கில் வலு சேர்க்கிறார்.

இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் தொடர்ந்து அபாரமாக பந்துவீசி வருகிறார். ஜடேஜாவை தள்ளிவிட்டதாக எழுந்த சர்ச்சையிலிருந்து எவ்வித தண்டனையுமின்றி தப்பித்தஆண்டர்சன், இந்திய பௌலர்களுக்கு சிம்மசொப்பனமாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. இதேபோல் ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் ஜோர்டான் ஆகியோரும் வேகப்பந்து வீச்சில் பலம் சேர்க்கின்றனர்.

சுழற்பந்து வீச்சில் மொயீன் அலியை நம்பியிருக்கிறது இங்கிலாந்து. கடந்த போட்டியின் 2-வது இன்னிங்ஸில் இந்தியாவின் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மொயீன் அலி, இந்தப் போட்டியிலும் அதே உத்வேகத்தில் பந்துவீசுவார் என நம்பலாம்.

இந்தியா: எம்.எஸ்.தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ஷிகர் தவன், முரளி விஜய், கௌதம் கம்பீர், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ஸ்டூவர்ட் பின்னி, அஸ்வின், இஷாந்த் சர்மா, முகமது சமி, புவனேஸ்வர் குமார், ஈஸ்வர் பாண்டே, பங்கஜ்சிங், வருண் ஆரோன், நமன் ஓஜா.

இங்கிலாந்து: அலாஸ்டர் குக் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், கேரி பேலன்ஸ், இயான் பெல், ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் ஜோர்டான், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), சாம் ராப்சன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், ஸ்டீவன் ஃபின்.

போட்டி நேரம்: பிற்பகல் 3.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x