Published : 16 Nov 2018 08:07 PM
Last Updated : 16 Nov 2018 08:07 PM

டி20, ஒருநாள் போட்டிக்கு தகுதியில்லாதவனா நான்?: இசாந்த் சர்மா வேதனை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20, ஒரு நாள் தொடரில் தன்னைத் தேர்வு செய்யாமல் இருப்பது வேதனையளிக்கிறது என்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்று சிறப்பாகப் பந்துவீசினார். இதையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அணி நிர்வாகம் தேர்வு செய்தது. அதுமட்டுமல்லாமல், கடந்த முறை ஆஸ்திரேலியத் தொடரிலும் இசாந்த் சர்மா இடம் பெற்றிருந்ததால், அவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

இதுவரை 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இசாந்த் சர்மா 256 விக்கெட்டுகளையும், 80 ஒருநாள் போட்டிகளில்விளையாடிய 115 விக்கெட்டுகளையும் இசாந்த் சர்மா வீழ்த்தியுள்ளார்.

ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் அவரை அணி நிர்வாகம் தேர்வு செய்யாதது குறித்து அவர் மனக்குறை அடைந்துள்ளார். அதுகுறித்து இசாந்த் சர்மா ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

இந்திய அணியில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய 3 பிரிவுகளிலும் விளையாட எனக்கு ஆசைதான். ஆனால், ஆஸ்திரேலியத் தொடரில் என்னை டெஸ்ட் தொடருக்கு மட்டும் அணி நிர்வாகம் தேர்வு செய்தது என்னை வேதனைப்படுத்துகிறது. ஒருநாள் அணியிலும், டி20 அணியிலும் நான் நிராகரிக்கப்பட்டது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. ஆனால், என்னால் கட்டுப்படுத்த முடியாது, நான் சாதாரண டெஸ்ட் போட்டி வீரர்தான் என்று நான் மனவெறுப்பு அடைந்தால், அது எனது திறமையை பாதிக்கும்.

இப்போதுள்ள நிலையில் எனக்கு 30 வயதாகிறது. ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் அடுத்த சுற்றுப்பயணத்தில் நான் இடம் பெறுவேனா எனத் தெரியாது. ஏனென்றால் அப்போது எனக்கு 34 வயது ஆகி இருக்கலாம். என்னிடம் என்ன திறமை இருக்கிறதோ அதை நாட்டுக்காக அளிப்பேன். நாட்டுக்காக விளையாட இரண்டாவது வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் வெறுப்பாகவே இருக்கும்.

என்னைப் பொறுத்தவரை முதிர்ச்சி அடைந்த பந்துவீச்சாளர் என்ற முறையில் எனது அனுபவங்களை ஜூனியர் வீரர்களுக்கு வழங்குவேன். என்னால் பீல்டர்களை சரியாக அமைத்து, அதற்கு ஏற்றார்போல் பந்துவீசும் திறமையும் உண்டு. அனுபவம் மிகுந்த வீரர்களாக வந்துவிட்டால், அதை வெளிப்படுத்த வேண்டும். எனக்கு அனுபவமும், முதிர்ச்சியும் உண்டு என்பதால், எனது பந்துவீச்சுக்கு ஏற்றார்போல் பீல்டிங்கை அமைக்க முடியும். ஆனால் நான் அனுபவம் குறைந்த வீரர்போல் என்னை டி20, ஒருநாள் அணிக்கு தேர்வு செய்யவில்லை. அதற்கு எனக்கு தகுதியில்லையா

இவ்வாறு இசாந்த் சர்மா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x