Published : 27 Nov 2018 12:24 PM
Last Updated : 27 Nov 2018 12:24 PM

பண மழை கொட்டுது; எந்த விளையாட்டிலும் கிடைக்காத ஊதியம் ஐபிஎல் வீரர்களுக்கு கிடைக்கிறது: ஆய்வில் தகவல்

உலகின் எந்த விளையாட்டிலும் ஒரு ஆட்டத்தில் கிடைக்கும் ஊதியத்தைக் காட்டிலும் ஐபிஎல் போட்டியில் ஒரு ஆட்டத்தில் கிடைக்கும் ஊதியமே அதிகம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் போட்டித் தொடர் தொடங்கப்பட்டதில் இருந்து ஆண்டுkகு ஆண்டு விஸ்வரூப வளர்ச்சியை அடைந்து கொண்டே வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் ஐரோப்பிய கால்பந்து லீக், ப்ரீமியர் லீக் போன்ற சிந்தனையில் லலித் மோடி உருவாக்கிவிட்டுச் சென்றார். ஆனால், இன்று உலக அளவில் பணம் கொழிக்கும் விளையாட்டுத் தொடராக ஐபிஎல் மாறி இருக்கிறது.

சமீபத்தில் தி கார்டியன் 'தி குலோபல் ஸ்போர்ட்ஸ் சர்வே' என்ற தலைப்பில் நடத்திய ஆய்வில் உலகில் விளையாடப்படும் எந்த விளையாட்டிலும் ஒரு போட்டியில் பெறும் ஊதியத்தைக் காட்டிலும் ஐபிஎல் போட்டித்தொடரில் ஒரு ஆட்டத்தில் வீரர்கள் பெறும் ஊதியமே அதிகம் என்று தெரியவந்துள்ளது.

அதாவது ஒருநேரத்தில் என்பிஏ (NBA) கூடைப்பந்து, ஐரோப்பிய கால்பந்து லீக், என்எப்எல்(NFL) ஆகிய போட்டிகளில் விளையாடும் வீரர்கள்தான் அதிகமான ஊதியம் பெறுபவர்களாகக் கருதப்பட்டனர். ஆனால், இன்று அந்த வீரர்களைக் காட்டிலும் ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் ஊதியம் பெறுகிறார்கள்.

தி கார்டியன் வெளியிட்ட அறிக்கையின்படி, இங்கிலீஷ் ப்ரிமியர் லீக் கால்பந்துப் போட்டிதான் பணக்கார விளையாட்டு என்று கருதப்பட்டது. இந்த அணியில் உள்ள வீரர்கள் ஆண்டுக்கு சராசரியாக 29.90 லட்சம் யூரோ (ரூ.24 கோடி) பெறுகின்றனர்.

அதேசமயம், ஐபிஎல் போட்டியில் அணிகளில் இடம் பெற்ற வீரர்கள் சராசரியாக ஒரு போட்டிக்கு 2,74,624 யூரோ (ரூ.2.20 கோடி) பெறுகின்றனர். ஐபிஎல் போட்டி அணிகளில் இடம் பெற்ற வீரர்கள் மொத்தம் 14 போட்டிகளில்தான் அதிகபட்சமாக விளையாடுகின்றனர்.

ஆனால், இங்கிலீஷ் ப்ரிமியர் லீக்கில் விளையாடும் வீரர்கள் சராசரியாக ஒரு போட்டிக்கு ரூ.63.28 லட்சம் (78,703யூரோ) மட்டுமே பெறுகின்றனர். தேசிய கால்பந்து லீக்கில் விளையாடும் வீரர்கள் ஒரு போட்டிக்கு ரூ.1.10 கோடி (1,38,354 யூரோ) பெறுகின்றனர்.

ஐபிஎல் போட்டியில் ஒரு ஆட்டத்தில் ஒரு வீரர் சராசரியாகப் பெறும் தொகைதான் மற்ற விளையாட்டுகளிலேயே அதிகபட்சமாக இருக்கிறது.

மேலும் ஐபிஎல் போட்டியில் ஒரு அணி அதிகபட்சமாக 14 ஆட்டங்களில் மட்டுமே விளையாடுகிறது. ஆனால், ப்ரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் ஒரு அணி 38 ஆட்டங்களில் பங்கேற்கிறது. முதலிடம் பிடிக்கும் அணி சாம்பியன் லீக், ஐரோப்பா லீக், எப்ஃஏ கப் ஆகியவற்றிலும் விளையாட வேண்டும்.

ஆனால், கால்பந்துப் போட்டியில் ஒட்டுமொத்த சீசனில் விளையாடும் வீரர்களின் ஊதியத்தைக் கணக்கிட்டால், ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்களின் ஊதியம் குறைவுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

12-வது ஐபிஎல் போட்டி அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. ஐபிஎல் போட்டி தொடங்கப்பட்டதில் இருந்து இப்போதுவரை 19 சதவீதம் வளர்ந்திருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு 503 கோடி டாலர் (ரூ.35,667கோடி) இருந்த நிலையில், 2018-ம் ஆண்டு மதிப்பு 603 கோடி டாலர்(ரூ.42769 கோடி) உயர்ந்துவிட்டது.

ஐபிஎல் போட்டியில் விளையாடும் அணிகள் குறித்த மதிப்பில், மும்பை இந்தியன்ஸ் அணியின் மதிப்பு 113 மில்லியன் டாலராகவும், ஷாரூக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மதிப்பு 104 மில்லியன் டாலராகவும் உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x