

2019 ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வேகப்புயல் மிட்செல் ஸ்டார்க் ஆடமாட்டார் என்று தெரிகிறது. ஏனெனில் அவரை ஒப்பந்தத்திலிருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்து விட்டது.
இதனை டெக்ஸ்ட் மெசேஜ் மூலம் மிட்செல் ஸ்டார்க்கிற்குத் தெரிவித்தது நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம்.
“கொல்கத்தா அணி நிர்வாகிகளிடமிருந்து எனக்கு டெக்ஸ்ட் மெசேஜ் இருநாட்களுக்கு முன்பாக வந்தது. அதில் என்னை விடுவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. சிறு காயம்தான் மற்றபடி நான் நன்றாகத்தான் உணர்கிறேன். ஒரு சிறு காலக்கட்டம் உடல் காயம் பிரச்சினை கொடுத்தது இப்போது இல்லை.
நான் அடுத்த ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை என்றால் பரவாயில்லை, போனால் போகிறது, இதுவே எனக்கு இங்கிலாந்தில் 6 மாத கால பெரிய அளவிலான கிரிக்கெட்டுக்கு என்னைத் தயார்படுத்திக் கொள்ள பெரிய வாய்ப்பாக அமைந்ததாகக் கருதுகிறேன்” என்றார் ஸ்டார்க்.
2019-ல் இங்கிலாந்து உலகக்கோப்பையை நடத்துகிறது, அது முடிந்தவுடன் ஆகஸ்டில் ஆஷஸ் தொடர் ஆரம்பமாகிறது. இதைத்தான் மிகப்பெரிய 6 மாதகால கிரிக்கெட் என்கிறார் மிட்செல் ஸ்டார்க்.
ஸ்டார்க் ஐபிஎல் விளையாட நினைத்தால் வரும் டிசம்பர் மாத ஏலத்துக்கு தன் பெயரை அளிக்க வேண்டும், செய்வாரா என்பது தெரியவில்லை.