4-வது முறையாக சாம்பியன்: இங்கிலாந்தை வீழ்த்தி டி20 மகளிர் உலகக்கோப்பையை வென்றது ஆஸி.

4-வது முறையாக சாம்பியன்: இங்கிலாந்தை வீழ்த்தி டி20 மகளிர் உலகக்கோப்பையை வென்றது ஆஸி.
Updated on
1 min read

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 4-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

ஆன்டிகுவா நகரில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து கோப்பையை வென்றது ஆஸ்திரேலிய அணி.

இதற்குமுன் ஆஸ்திரேலிய அணி 2010, 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணி 3 –வது முறையாக உலகக்கோப்பை இறுதிப்போட்டிவரை வந்து பட்டத்தை தவறவிட்டுள்ளது.இந்த மூன்று முறையும் ஆஸ்திரேலியாவிடம்தான் இங்கிலாந்து அணி கோப்பையை தவறவிட்டுள்ளது.

அதேசமயம், இறுதிப்போட்டிவரை வந்த ஆஸ்திரேலிய அணி 4-வது முறையாகக் கோப்பையை வென்றுள்ளது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் நைட் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அணியில் அதிகபட்சமாகத் தொடக்க வீராங்கனை வாட் 43 ரன்களும், கேப்டன் நைட் 25 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒரு இலக்க ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.

ஆஸ்திரேலியத் தரப்பில் கார்ட்னர் 3 விக்கெட்டுகளையும், வாரேஹம், ஸ்கவுட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

106 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 29 பந்துகள் மீதம்இருக்கும்போது, 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றியை ருசித்தது. அந்த அணியின் கேப்டன் லேனிங் 28ரன்களுடனும், கார்டனர் 33 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். தொடக்க ஆட்டக்காரர்கள் ஹீலி 22 ரன்களும், மூனி 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

ஆட்டநாயகி விருது ஆஸ்திரலிய வீராங்கனை கார்ட்னருக்கும், தொடர் நாயகி விருது அலிசா ஹீலேவுக்கும் வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in