Last Updated : 17 Nov, 2018 11:44 AM

 

Published : 17 Nov 2018 11:44 AM
Last Updated : 17 Nov 2018 11:44 AM

பிட்சின் பவுன்ஸை கையகப்படுத்தி விட்டால் ஆஸி. பேட்ஸ்மென்கள் நாள் முழுதும் விளாசுவார்கள்: ஆஸி. எளிதல்ல; எச்சரிக்கும் ஆஷிஷ் நெஹ்ரா

தற்போதைய இந்திய வேகப்பந்து வீச்சு அயல்நாடுகளில் கலக்கி வரும் நிலையில், ஆஸ்திரேலிய பிட்ச், கூகபரா பந்துகள், ஸ்விங், பவுன்ஸ் குறித்து இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கடும் சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும், இங்கிலாந்து பிட்ச் போல் அல்ல என்று ஆஷிஷ் நெஹ்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2003-04 கங்குலி தலைமை தொடரில் இந்திய அணி 1-1 என்று ட்ரா செய்ததில் ஆஷிஷ் நெஹ்ரா இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். தற்போதைய அணியில் பும்ரா, உமேஷ் யாதவ், ஷமி அங்கு நன்றாக வீச வாய்ப்பிருக்கிறது என்று கூறும் ஆஷிஷ் நெஹ்ரா, புவனேஷ்வர் குமாருக்கு மிகக்கடினம் என்கிறார்.

இது குறித்து அவர் சமீபத்தில் பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

ஆஸ்திரேலிய அணி மறுகட்டமைப்பில் உள்ளது, இதுதான் இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பாகும், இதில் சந்தேகமில்லை. அவர்களை வீழ்த்தும் பந்து வீச்சு நம்மிடம் உள்ளது. ஆனால் அங்கு பிட்ச் உள்ளிட்ட நிலைமைகள் கடினமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  பிட்ச்கள் மட்டைக்குச் சாதகமாக இருக்கும், உஷ்ண வானிலை நிலவும்.

ஆஸ்திரேலிய பிட்ச்களில் கூடுதல் பவுன்ஸ் இருக்கும், ஆனால் ஸ்விங் அவ்வளவாக இருக்காது, அதாவது கூகபரா பந்தின் தையல் வலுவிழக்கும் வரை ஸ்விங் இருக்கும், அதன் பிறகு ஸ்விங் இருக்காது, இங்கிலாந்து போல் எப்போதும் ஸ்விங் ஆகிக் கொண்டே இருக்காது. பவுன்ஸை சரியாக அவர்கள் பேட்ஸ்மென்கள் பிடித்து விட்டார்கள் என்றால் நாள் பூராவும் அடித்துக் கொண்டேயிருப்பார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் இங்கிலாந்தில் நம் வேகப்பந்து வீச்சாளர் 6 ஓவர்கள் ஸ்பெல்லில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினால் எந்த கேப்டனும் மேலும் 2-3 ஓவர்கள் கொடுக்கவே விரும்புவார்கள். ஆனால் ஆஸ்திரேலியாவில் இது பின்னடைவை ஏற்படுத்தும், காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அடிலெய்டில் புவனேஷர் குமார் தொடங்க மாட்டார் என்றே நான் நினைக்கிறேன்.  கூகாபரா பந்துகள் பழசானால் இவரால் ஸ்விங் செய்ய முடியாது. எஸ்ஜி, அல்லது டியூக் பந்துகள் போல் இது ஸ்விங் ஆகாது.

உமேஷ் யாதவ் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும்,  அவரிடம் நம்ப முடியாத திறமைகள் உள்ளன. இந்திய வறண்ட பிட்ச்களிலேயே அவரது பவுலிங் திறமையை நாம் பார்த்தோம், அவர் உடல் தகுதி நிலையிலும் மற்றவர்களை ஒப்பிடும்போது சிறந்து விளங்குகிறார்.

மொகமது ஷமி இங்கிலாந்தில் நல்ல உடல்தகுதியுடன் ஆற்றலுடன் வீசினார். ஓவலில் அவர் பந்து வீச்சு அபாரம். ஆஸி.யிலும் அவர் நன்றாக வீசுவார்.

இவ்வாறு கூறினார் ஆஷிஷ் நெஹ்ரா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x