Published : 28 Nov 2018 02:11 PM
Last Updated : 28 Nov 2018 02:11 PM

வலுக்கும் மோதல்: ஹர்மன் பீரித் கவுர் ஒரு பொய்க்காரர்; மிதாலி ராஜின் மேனேஜர் கடும் சாடல்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன் பீரித் கவுர் பொய்க்காரர் என்றும், அவர் ஒரு தகுதியில்லாத கேப்டன் என்றும் இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் மேனேஜர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹர்மன் பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அரை இறுதியில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது.

இந்த நிலையில் மிகவும் முக்கியமான நாக்-அவுட் ஆட்டத்தில் முன்னாள் கேப்டனான மிதாலி ராஜ் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காயத்திலிருந்து குணமடைந்த பின்னரும் அவர் அரை இறுதியில் சேர்க்கப்படாத விஷயம் பெரிதாகக் கிளம்பியுள்ளது.

இதைத் தொடர்ந்து கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர், ’’ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றோம். எனவே அந்தக் கூட்டணியை மாற்ற வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது. அணியின் நலனுக்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

ஆனால் மிதாலி ராஜின் பயிற்சியாளர், ஹர்மன் பிரீத் கவுர் மீது கடுமையான குற்றச் சாட்டுகளைத் தெரிவித்தார்.  இதனைத் தொடர்ந்து தற்போது மிதாலி ராஜின் மேனேஜர் அனிஷா குப்தா இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் ஹர்மன் பீரித் கவுரையும், பிசிசியையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், ”ஹர்மன் பிரீத் கவுர் ஒரு பொய்க்காரர், பக்குவமில்லாதவர், இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருக்க தகுதி இல்லாதவர். இந்திய கிரிக்கெட் மகளிர் அணி விளையாட்டைவிட அரசியலை அதிகம் நம்புகிறது. தனது சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்திய பிறகும் மிதாலி ராஜ் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குதற்காக உலகக் கோப்பையில் அதுவும் இங்கிலாந்து உடனான போட்டியில் மிதாலி ராஜ் போன்ற வீரர்களை நீக்கியது சரியல்ல. பிசிசிஐ விளையாட்டைவிட அரசியிலை அதிகம் நம்புகிறது” என்று அனிஷா குப்தா பதிவிட்டுள்ளார்.

ஆனால் சில மணி  நேரங்களில் அவருடைய ட்வீட்கள் நீக்கப்பட்டன. அவருடைய ட்விட்டர் பக்கமும்  நீக்கப்பட்டது. இதுகுறித்து அவர் கூறும்போது, ”எனது வார்த்தைகள் கோபமாக இருந்திருக்கலாம். ஆனால் தவறான நடவடிக்கைக்கு எதிரான என்னுடைய பதிவுகள் சரிதான்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்  மிதாலி ராஜ்,  இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரமேஷ் பவார், நிர்வாகக் குழு (சிஓஏ) உறுப்பினராக உள்ள டயானா எடுல்ஜி ஆகியோரை  குற்றம் சாட்டி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x