Published : 31 Aug 2014 12:13 PM
Last Updated : 31 Aug 2014 12:13 PM

அமெரிக்க ஓபன்: முன்னணி வீராங்கனைகள் சறுக்கல்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றில் முன்னணி வீராங்கனைகளான சைமோனா ஹேலப், ஏஞ்ஜெலிக் கெர்பர், வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோர் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் 3-வது சுற்றில் குரேஷியாவைச் சேர்ந்த மூத்த வீராங்கனையான மிர்ஜனா லூசிச் பரோனி 7-6 (6), 6-2 என்ற நேர் செட்களில் உலகின் 2-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப்புக்கு அதிர்ச்சி தோல்வியளித்தார்.

வெற்றி குறித்துப் பேசிய லூசிச், “இது வியக்கத்தக்க வெற்றி. பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார். 1999 விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய லூசிச், அதன்பிறகு இப்போதுதான் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்று வரை வந்திருக்கிறார்.

லூசிச் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இத்தாலியின் சாரா எர்ரானியை சந்திக்கவுள்ளார். சாரா தனது 3-வது சுற்றில் 6-0, 0-6, 7-6 (5) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸை தோற்கடித்தார்.

கெர்பருக்கு அதிர்ச்சி

மற்றொரு ஆட்டத்தில் ஸ்விட்சர் லாந்தைச் சேர்ந்த 17 வயது வீராங் கனையான பெலின்டா பென்சிச் 6-1, 7-5 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பரை வீழ்த்தினார். அடுத்ததாக செர்பி யாவின் ஜெலீனா ஜான்கோவிச்சை சந்திக்கவுள்ளார் பென்சிச்.

அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா, அனா இவானோவிச் ஆகியோர் 2-வது சுற்றோடு வெளியேறிய நிலையில், இப்போது ஹேலப், ஹெர்பர் ஆகியோரும் வெளியேறியுள்ளனர். இவர்கள் 4 பேரும் மகளிர் தரவரிசையில் டாப்-10-ல் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் மரியா ஷரபோவா 6-2, 6-4 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் சபைன் லிசிக்கியை தோற்கடித்து 4-வது சுற்றை உறுதி செய்தார். அடுத்த சுற்றில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியை சந்திக்கிறார் ஷரபோவா.

ரோஜர் ஃபெடரர் வெற்றி

ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் சாம் குரோத்தை தோற்கடித்தார். அமெரிக்க ஓபனில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான ஃபெடரர் தனது 3-வது சுற்றில் ஸ்பெயினின் மார்செலோ கிரானோலர்ஸை சந்திக்கிறார்.

போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயினின் டேவிட் ஃபெரரை எதிர்த்து விளையாடவிருந்த ஆஸ்திரேலியாவின் பெர்னார்ட் டாமிக், இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து 2-வது சுற்றில் களமிறங்காமலேயே 3-வது சுற்றுக்கு முன்னேறினார் ஃபெரர்.

மற்றொரு ஆட்டத்தில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 6-1, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் இஸ்ரேலின் டூடி செலாவைத் தோற்கடித்தார். இதுதவிர போட்டித் தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ள குரேஷியாவின் மரின் சிலிச், 18-வது இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன், 19-வது இடத்தில் ஸ்பெயினின் ஃபெலிஸியானோ லோபஸ், 20-வது இடத்தில் உள்ள பிரான்ஸின் கேல் மான்பில்ஸ் உள்ளிட்டோரும் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

3-வது சுற்றில் பயஸ் ஜோடி

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செக்.குடியரசின் ரடேக் ஸ்டெபானெக் ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றான 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த ஜோடி தங்களின் 2-வது சுற்றில் 7-6 (3), 6-3 என்ற நேர் செட்களில் சீன தைபேவின் யென் சன் லூ-செக்.குடியரசின் ஜிரி வெஸ்லே ஜோடியை தோற்கடித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x