Published : 29 Nov 2018 08:20 PM
Last Updated : 29 Nov 2018 08:20 PM

கடினமாக உழைக்கும் சமையல்காரர்கள் யார்? பென் ஸ்டோக்ஸை கிண்டல் செய்து சஞ்சய் மஞ்சுரேக்கர் ட்வீட்- ஸ்டோக்ஸ் பதில்

சமூக வலைத்தளம் என்ற ஒன்று ஒருவரையொருவர் கிண்டல், கேலி செய்வது, மீம்கள் உருவாக்குவது என்று பொழுதுபோக்கு ஊடகங்களாக மாறி வருகிறது. இதில் கிரிக்கெட் வீரர்களும் ஒருவருக்கொருவர் கலாய்ப்பதும் சகஜமாகி வருகிறது.

இதில் சில சமயங்கள் நல்ல மனநிலையில் எடுத்துக் கொள்ளப்படுகிறது, பலவேளைகளில் சர்ச்சைகள் கிளம்புகிறது. இப்போது சஞ்சய் மஞ்சுரேக்கர் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை கிண்டல் செய்து வெளியிட்ட ட்வீட் நெட்டிசன்கள் மத்தியில் ருசிகரமாகியுள்ளது.

சமீபத்தில் இங்கிலாந்து அணி அயல்மண்ணில் சுமார் 55 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு ஒயிட் வாஷ் தோல்வி அளித்தது. இங்கிலாந்து அணியில் மொயீன் அலி, ஜாக் லீச் ஆகிய ஸ்பின்னர்களும் பென் ஃபோக்ஸ் என்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் முக்கியமான இன்னிங்ஸ்களையும் ஆடி பங்களிப்பு செய்தனர்.

பென்ஸ்டோக்ஸ் பங்கு குறித்து சஞ்சய் மஞ்சுரேக்கர் ட்வீட்டில், “ஆம்! உங்களிடம் கடினமாக உழைத்து  பிரமாதமான உணவைச் சமைக்கும் சமையல்காரர்கள் உள்ளனர். ஆனால் ஒருவர் சமையல் எல்லாம் முடிந்தவுடன் மேலாக அலங்காரம் செய்வார், அவருக்கு அனைத்துப் புகழும் வந்து சேரும். லீச், மொயின் அலி, பென் ஃபோக்ஸ் ஆகியோர்தான் அந்த கடின உழைப்பு சமையல் காரர்கள்.  ஸ்டோக்ஸ் மேல் அலங்காரம் செய்பவர்” என்று பதிவிட்டுள்ளார்.

இதற்குப் பதில் அளித்த பென் ஸ்டோக்ஸ், ‘சொந்தப் புகழ் குறித்து எங்களுக்கு அக்கறையில்லை. அனைத்து உணவுகளிலும் கூட சில வேளைகளிலி மேல் அலங்காரம் ஒன்றுமில்லாமலும் போகும். இது அணியாகத் திரண்டு ஆடப்படும் ஆட்டம், அப்படித்தான் 3-0 வென்றோம். சியர்ஸ் சஞ்சய்’ என்று பதில் ட்வீட் செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x