

தோனி சமீபகாலங்களாக பேட்டிங்கில் சொதப்பி வருகிறார், இதனையடுத்து 2019 உலகக்கோப்பைக்கு அவர் தேவையா இல்லையா என்பது நாட்டில் பெரும் விவாதக்களமாக மாறியுள்ளது, கருத்துகள் தோனிக்குச் சார்பாகவும் எதிராகவும் பிரிந்துள்ளன.
2018-ம் ஆண்டில் 13 இன்னிங்ஸ்களில் வெறும் 275 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார் தோனி, ஆனாலும் அவர் ஏன் அணிக்குத் தேவை என்ற விதமாக ‘லாபி’ செய்திகள் நிறைய வந்து கொண்டுதான் இருக்கின்றன, ஆனால் மூத்த முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கரே முதலில் தோனி உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆடி பயிற்சி எடுத்து கொள்ள வேண்டும், நேரடியாக அவுட் ஆஃப் பார்மில் போட்டிகளில் இறங்குவது கூடாது என்று தெரிவித்தவர் திடீரென பல்ட்டி அடித்து தோனியின் உதவி கோலிக்குத் தேவைப்படுகிறது என்றார்.
பவுலர்களிடம் இந்தியில் பேசி அவர்களிடமிருந்து வேலை வாங்குகிறார் என்று வக்காலத்து வாங்கினார். கோலி மட்டும் என்ன வீரர்களிடம் தெலுங்கு அல்லது தமிழில் பேசுகிறாரா என்ன? அவரும் இந்தியில் தான் பேசுகிறார்.
இந்நிலையில் முன்னாள் இந்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர் தோனியை அபரிமிதமாக புகழ்ந்து பேசியுள்ளார்:
“ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் ஆகியோர் உள்ளனர், இவர்களும் ஓரளவுக்கு நன்றாகவே ஆடினர், ஆனால் தோனி தோனிதான், அவர் பக்கத்தில் கூட யாரும் வர முடியாது. கிரிக்கெட் வீரராக மட்டுமல்ல, அவரைச் சுற்றியுள்ள ஒளிவட்டம், இது சாஹல், குல்தீப் போன்ற வீரர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். மிக முக்கியமாக விராட் கோலிக்கே கூட உதவிகரமாக இருக்கும்.
தோனிக்குத் தான் என்ன செய்கிறோம் என்பது தெரியும். ஆசியக் கோப்பையிலும் மேற்கிந்திய தொடரிலும் அவர் சரியாக ஆடவில்லை எனினும் இன்னும் 2 மாதங்கள் அவருக்கு கால அவகாசம் உள்ளது. ஆஸ்திரேலியாவில் ஒருநாள் போட்டிகளில் அவர் நன்றாக ஆடுவார், தோனியைப்பற்றி நான் கவலைப்பட வேண்டியதில்லை.
இவ்வாறு கூறினார் ஆஷிஷ் நெஹ்ரா.