இஷாந்த் சர்மாவை விட பந்து வீச்சில் ‘நாங்கள்’ திறமைசாலிகளே: ஆஷிஷ் நெஹ்ரா திட்டவட்டம்

இஷாந்த் சர்மாவை விட பந்து வீச்சில் ‘நாங்கள்’ திறமைசாலிகளே: ஆஷிஷ் நெஹ்ரா திட்டவட்டம்
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை, பிட்ச், உடற்தகுதி, கூகாபரா பந்து, பேட்ஸ்மென்கள் என்று கூறுபோட்டு பேசியுள்ள ஆஷிஷ் நெஹ்ரா, இஷாந்த் சர்மாவைப் புகழ்வது போல் தாழ்த்தியும் தாழ்த்துவது போல் உயர்த்தியும் பேசியுள்ளார்.

இந்திய பந்து வீச்சுப் பயிற்சியாளர் பதவிக்கு தான் பொருத்தமானவன் என்பதை பல்வேறு விதங்களில் நெஹ்ரா சமீபமாக சூசமாகத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக அவர் சமீபத்தில் பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

இஷாந்த் சர்மா 256 விக்கெட்டுகளை வீழ்த்தியவர், ஆஸி. பிட்ச்களில் அனுபவசாலி. 10 ஆண்டுகளாக 35-40 ஒவர்களை அவர் வீசி வருகிறார், இது சாதாரணமல்ல. இதற்குச் சிறப்புத் திறமை வேண்டும்.

ஆனால் ஒரு விஷயத்தை நான் நேர்மையாகக் கூற விரும்புகிறேன். நானாக இருக்கட்டும் அல்லது ஆர்.பி.சிங்காக இருக்கட்டும், அல்லது ஸ்ரீசாந்த்தாக இருக்கட்டும் வேகப்பந்து வீச்சாளர்களாக எங்களிடம் இஷாந்த் சர்மாவை விட அதிகத் திறமைகளைக் கொண்டிருந்தோம். எனக்கும் ஆர்.பி.சிங்குக்கும் காயம் பெரும் இடையூறாக அமைந்து விட்டது, ஸ்ரீசாந்த் விவகாரம் முற்றிலும் வேறுபட்ட ஒன்று, ஆனால் அவரிடம் அபரிமிதமான திறமைகள் பொதிந்திருந்தன.  ஆனால் இஷாந்த் சர்மாவின் சிறப்பு என்னவெனில் நீண்ட காலத்துக்கு அவர் உடல்தகுதியுடன் இருக்க முடிகிறது, ஆகவே இதற்கான பெருமையை அவருக்கு சேர்ப்பிக்கத்தான் வேண்டும்.

பும்ரா நாம் பார்ப்பதைவிடவும் சிகப்புப் பந்தில் பல திறமைகளைக் கைவசம் கொண்டவர், கூகபரா பந்து பழசாகும் போது அவரது யார்க்கர்கள் நிச்சயம் கைகொடுக்கும். இதுவரை பும்ராவை எதிர்கொள்ளாத பேட்ஸ்மென்கள் நிச்சயம் அவரது பந்துகளின் கோணம் மற்றும் திடீர் பவுன்ஸுக்கு திணறவே செய்வார்கள். இங்கிலாந்தில் பந்துகளை உள்ளே கொண்டு வந்து சற்றே வெளியே எடுக்கவும் செய்தார். எனவே பும்ரா ஒற்றைப் பரிமாண பவுலர் அல்ல.

இவ்வாறு கூறியுள்ளார் ஆஷிஷ் நெஹ்ரா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in