Last Updated : 20 Nov, 2018 01:57 PM

 

Published : 20 Nov 2018 01:57 PM
Last Updated : 20 Nov 2018 01:57 PM

கருணை கிடையாது: ஸ்மித், வார்னர் மீதான தடை நீடிக்கும்; ஆஸி. வாரியம் அதிரடி அறிவிப்பு

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் மீதான தடையைக் குறைக்கும், நீக்கும் பேச்சுக்கு இடமில்லை, தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக இன்று அறிவித்துள்ளது.

இதனால், இந்தியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஒருநாள் தொடரில் இவர்கள் 3 பேரும் விளையாடமாட்டார்கள் என்பது உறுதியாகியுள்ளது. இதனால் இந்திய அணிக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளதால், எதிர்வரும் டெஸ்ட் தொடரை முதல்முறையாகக் கைப்பற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் வீரர்கள் கூறியது நடக்க வாய்ப்புள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட் ஆகியோர் சிக்கினர். இவர்களில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு கிரிக்கெட் விளையாட ஒரு ஆண்டு தடையும், கேமரூன் பான்கிராப்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது.

இதில் பான்கிராப்ட் மீதான தடை டிசம்பர் மாதமும், ஸ்மித், வார்னர் மீதான தடை 2019-ம் ஆண்டு மார்ச் மாதமும் முடிகிறது. ஆனால், கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து சந்தித்து வரும் தோல்விகளை கருத்தில் கொண்டு ஸ்மித், வார்னர் இருவரையும் அணிக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தினரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்குப் பரிந்துரை செய்தனர், மேலும், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சூழ்நிலைதான் காரணம் என்று ஆதாரங்களையும் ஆஸி.வீரர்கள் சங்கத்தின் வாரியத்திடம் அளித்தனர்.

அதுமட்டுமல்லாமல் ஸ்மித், வார்னர் மீது தடை விதிக்கப்பட்ட பின் சிலமாதங்களில் பயிற்சியாளர் லீ மான் பதவி விலகினார். இருவரின் மீதும் தடை விதிக்க காணமாக இருந்த ஆஸ்திரேலிய வாரியத் தலைவர் டேவிட் பீர் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் சமீபத்தில் ராஜினாமா செய்தனர்.

பல்வேறு தரப்பில் இருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு நெருக்கடி வந்தது. ஸ்மித், வார்னர் மீதான ஒரு ஆண்டு தடை முடிய இன்னும் 4 மாதங்கள் இருக்கும் நிலையில், இந்தியத் தொடர், 2019-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டி, ஆஷஸ் கோப்பை என வரிசையாக ஆஸ்திரேலிய அணி விளையாட இருக்கிறது. இவற்றுக்கு ஆஸ்திரேலிய அணியைத் தயார் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் இந்திய அணிக்கு எதிரான தொடரிலும் அவர்கள் இருவரும் இடம் பெறவும் பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில் வார்னர், ஸ்மித், பான்கிராப்ட் ஆகியோர் மீதான தடையை நீக்குவது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்காலத் தலைவர் இயர்ல் எடிங்ஸ் தலைமையில் இன்று அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த ஆலோசனையின் முடிவில் 3 பேரும் தண்டனையைக் குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து ஆஸி.வாரியத்தின் தலைவர் இயர்ல் எடிங்க் கூறுகையில், "ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் உள்ளிட்ட பலதரப்பில் இருந்து ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் மீதான தடையைக் குறைக்கவேண்டும், அல்லது ரத்து செய்ய வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டது. பயிற்சியாளர் லீ மான் சென்றபின் அமர்த்தப்பட்ட ஜஸ்டின் லாங்கர் தலைமையில் கீழ் ஆஸ்திரேலிய அணி 21 சர்வதேச போட்டிகளில் இதுவரை 5 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. அதுவும் ஜிம்பாப்பே, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள்தான்.

3 வீரர்கள் மீதான தடையை நீக்கக் கோரி செய்யப்படும் விவாதங்கள் அனைத்தும் அந்த வீரர்களுக்கு அழுத்தத்தைத்தான் அதிகரிக்கும். அவர்கள் 3 பேரும் தண்டனையை ஏற்றுக்கொண்டுவிட்டனர். ஆதலால், அவர்கள் மீதான தண்டனையைக் குறைக்கும் பேச்சுக்கு இடமில்லை, தண்டனையைத் திருத்தவும் முடியாது” எனத் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக அறிவித்துவிட்டதால், 3 வீரர்களும் தண்டனை முடிந்தபின்பே சர்வதேசப் போட்டியில் விளையாடுவார்கள் என்பது உறுதியாகியுள்ளது. பான்கிராப்டுக்கு டிசம்பர் மாதம் தண்டனை முடிவதால், 2019-ம் ஆண்டு ஜனவரி இறுதியில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பான்கிராப்ட் அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், ஸ்மித், வார்னர் மீதான தடை மார்ச் மாதம் இறுதியில் முடிகிறது.ஆதலால், ஏப்ரல் மாதமே சர்வதேசப் போட்டிக்குத் திரும்புவார்கள். உலகக்கோப்பை மற்றும் ஆஷஸ் போட்டிக்கு அவர்கள் இருவரும் இடம் பெறுவார்கள்.

இதுகுறித்து கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறுகையில் “ உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் ஸ்மித், வார்னர் இருவரையும் மீண்டும் பார்ப்பது மகிழ்ச்சி. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் முடிவை மதிக்கிறோம். விரைவில் ஸ்மித், வார்னர் அணிக்குள் வருவார்கள்” எனத் தெரிவித்தார். ஆனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் வாரியத்தின் முடிவுக்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x