Published : 24 Nov 2018 12:05 PM
Last Updated : 24 Nov 2018 12:05 PM

தோனி ஓய்வு குறித்து கேட்க யாருக்கும் உரிமையில்லை- ஷாகித் அப்ரிடி ஆவேசம்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்று கேட்க யாருக்கும் உரிமையில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி கிரிக்கெட்டாக இருந்தாலும் அல்லது வெளியுலகிலும் தனக்குச் சரியெனப்பட்டதை வெளிப்படையாகப் பேசுவார். நாட்டைப்பற்றி கருத்துக்கள் என்றாலும் துணிச்சலாகப் பேசும் தன்மை கொண்டவர்.

சமீபத்தில் ஆங்கில செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு ஷாகித் அப்ரிடி பேட்டி அளித்திருந்தார். அப்போது அவரிடம் தோனியின் சமீபத்திய மோசமான பேட்டிங் விமர்சிக்கப்படுவதால், அவர் ஓய்வு குறித்த பேச்சு வலுப்படுகிறது என்று கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு ஷாகித் அப்ரிடி அளித்த பதிலில், “ எம்.எஸ். தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்ற கேள்வியைக் கேட்பதற்கு யாருக்கும் உரிமையில்லை. இந்திய அணிக்கும், கிரிக்கெட்டுக்கும் தோனி ஏராளமாகச் செய்துள்ளார். அவரின் வாழ்க்கையில் அவர் ஒரு முடிவு எடுப்பதற்கு யாருடைய உதவியும், வழிகாட்டலும் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு தோனி செய்ததைக் காட்டிலும் வேறுயாரும் செய்திருக்க முடியாது. ஆதலால், அவரின் ஓய்வு குறித்து பேச யாருக்கும் உரிமை இல்லை. 2019-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிக்கு தோனி அணிக்கு அவசியம். தோனி அணியில் இருந்தால், நிச்சயம் உலகக்கோப்பையை வெல்வதற்கு இந்திய அணிக்கு வாய்ப்பு உண்டு’’ என ஷாகித் அப்பிரிடி தெரிவித்தார்.

ஐசிசியின் மூன்றுவிதமான போட்டிகளில் இந்திய அணிக்குக் கோப்பையை வென்று கொடுத்த தலைமை தோனியையே சாரும். 2007-ம் ஆண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை, 2011-ஐசிசி உலகக்கோப்பை, 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போன்றவற்றை இந்திய அணி தோனி தலைமையில் வென்றது.

2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து தோனி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் மட்டும் விளையாடி வந்தார். ஆனால், ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற இந்திய அணியில் டி20 பிரிவு அணியில் தோனிக்கு முதல் முறையாக இடம் மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x