Published : 12 Nov 2018 05:11 PM
Last Updated : 12 Nov 2018 05:11 PM

தோனி, கோலி சாதனையை பின்னுக்கு தள்ளிய ரோஹித் சர்மா: புதிய மைல்கல்லை எட்டினார்

மேற்கிந்தியத்தீவுள் அணிக்கு எதிரான டி20 போட்டித் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி ஒயிட்வாஷ் செய்ததன் மூலம் கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனையை படைத்து, விராட் கோலி, தோனியின் சாதனையை உடைத்துள்ளார்.

சென்னையில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டி20 போட்டி நேற்று நடந்தது. இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இதன் மூலம் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது. இந்தத் தொடரை வென்றதன் மூலம் கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

அதாவது இதுவரை ரோஹித் சர்மா தலைமையில் 12 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடி அதில் 11 போட்டிகளில் வென்றுள்ளது. உலகில் எந்த அணியின் கேப்டனும் இதுபோன்று 12 போட்டிகளில் 11 போட்டிகளை இதற்கு முன் வென்றது இல்லை.

அதுமட்டுமல்லாமல், தொடர்ந்து இது டி20 போட்டித் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்ற முதல் இந்திய கேப்டனும் ரோஹித் சர்மா என்ற பெருமையைப் பெற்றார். கேப்டனாக இருந்த எம்.எஸ்.தோனி, கேப்டன் விராட் கோலி கூட தொடர்ந்து இரு டி20 தொடரை 3-0 என்ற கணக்கில்வென்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக், ஆஸி வீரர் மைக்கேல் கிளார்க், அஸ்கர் ஸ்டானிக்ஜாய், சர்பிராஸ் அகமது ஆகியோர் கூட கேப்டனாக இருந்தபோது முதல் 12 போட்டிகளில் 10 போட்டிகளில் மட்டுமே வென்றிருந்தனர். ஆனால், ரோஹித் சர்மா மட்டுமே 11போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

ரோஹித் சர்மா தலைமையில் இதற்கு முன் இலங்கைக்கு 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்ற இந்திய அணி டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

மேலும், டி20 தொடர்களை 3-0 என்ற கணக்கில் அதிகமாக வென்ற அணி என்ற அடிப்படையில் ஆப்கானிஸ்தான் சாதனையை இந்திய அணி சமன் செய்துள்ளது. ஆப்கன் அணி 3 தொடர்களை வென்றிருந்தது. அதேசமயம், பாகிஸ்தான் அணி டி20 தொடர்களை 3-0 என்ற கணக்கில் 5 தொடர்களை வென்று முதலிடத்தில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x