Last Updated : 18 Nov, 2018 05:28 PM

 

Published : 18 Nov 2018 05:28 PM
Last Updated : 18 Nov 2018 05:28 PM

இந்திய அணியை மட்டும் ஏன் கேள்வி கேட்கிறீர்கள்?- ரவி சாஸ்திரி காட்டம்

வெளிநாட்டுப் பயணத்தின் போது இந்திய அணி மட்டும் ஏன் தோல்விகளைச் சந்தித்து வருகிறது என்று எங்களை மட்டும் கேட்பது நியாயமல்ல என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டி வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கிடையே பிரிஸ்பேன் நகரில் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

இந்திய அணி தொடர்ந்து வெளிநாட்டுத் தொடர்களில் தோல்விகளைச் சந்திக்க காரணம் என்ன? 2018-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவிடம் 2-1 என்றும், இங்கிலாந்தில் 1-4 என்று தொடரை இழந்துள்ளதால் ஆஸி. தொடர் முக்கியமானதா?

வெளிநாட்டுத் தொடர்களில் இந்திய அணி மட்டும்தான் தோல்வி அடைந்து இருப்பதுபோன்று கேள்விகளைக் கேட்கிறீர்கள். இந்திய அணி மட்டும்தான் வெளிநாடுகளில் தோல்விகளைச் சந்தித்ததா?

உங்களின் தோல்விகளில் இருந்து நீங்கள் பாடம் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள். தென் ஆப்பிரிக்காவும், ஆஸ்திரேலியாவும் ஒருநேரத்தில் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு தோல்விகளைச் சந்தித்து இருக்கிறார்கள். இன்றுள்ள சூழலில் பெரும்பாலான அணிகள் வெளிநாட்டுத் தொடர்களில் சிறப்பாகச் செயல்படவில்லை.

எந்த அணி வெளிநாடுகளில் சிறப்பாக சமீபத்தில் செயல்பட்டது என்று நீங்கள் சொல்லுங்கள். அவ்வாறு இருக்கும் போது இந்தியாவை மட்டும் தொடர்ந்து கேள்வி கேட்பது ஏன்?

இங்கிலாந்து, அல்லது தென் ஆப்பிரிக்காவிடம் டெஸ்ட் தொடரில் தோற்றது குறித்து அணி வீரர்களிடம் பேசி இருக்கிறீர்களா?

எங்களிடம் இருந்து வெற்றி பறிக்கப்பட்ட அந்தத் தருணம் குறித்து நாங்கள் அணியிடம் பேசி இருக்கிறோம். டெஸ்ட் போட்டிகளைப் பார்த்தால், நாம் அடித்த ஸ்கோர் நம்முடைய கதையைக் கூறாது. சில கடினமான போட்டிகளில் நாங்கள் போராடித் தோற்று இருக்கிறோம். அந்தத் தருணத்தில் ஸ்கோரைக் காட்டிலும் தருணங்களும், முயற்சிகளும் முக்கியம்.

டெஸ்ட் போட்டி நடக்கும் ஒவ்வொரு நாளும் ஆஸ்திரேலியா, அல்லது தென் ஆப்பிரிக்க அணி வீரர்களுக்கு அந்த அணியின் பயிற்சியாளர் என்ன ஒருமணிநேரம் வகுப்பு எடுத்தார்களா என்ன?

கடந்த சில மாதங்களாக ஆஸி. அணி தோல்விகளைச் சந்தித்து வருவதால் பலவீனமாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

நான் ஒருபோதும் ஆஸ்திரேலிய அணி பலவீனமான அணி என்று கணக்கிடவில்லை. தங்களின் சொந்த மண்ணில் அனைத்து அணிகளும் வலிமையானவை. இந்தியாவுக்கு எந்த அணியாவது பயணம் வரும் போது, எங்கள் அணியில்கூட சில வீரர்கள் சரியாக விளையாடாமல் இருக்கலாம், அதற்காக இந்திய அணி பலவீனமான அணி என்று சொல்விடுவீர்களா. அவ்வாறு கூறினால் ஆச்சர்யம்தான்.

இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலிய ஆடுகளங்களையும், மைதானங்களையும் ரசிப்பார்கள். கடந்த காலங்களில் இதைப் பார்த்திருக்கிறோம். அதேசமயம் வீரர்கள் உடற்தகுதியுடன் இருப்பது அவசியமாகும்.

இந்தநேரத்தில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அணியில் இல்லாதது பெரும் குறைதான். அவர் இருந்திருந்தால், பேட்ஸ்மேன் மற்றும் கூடுதலாக ஒரு பந்துவீச்சாளர் கிடைத்திருப்பார். விரைவில் அவர் குணமடைந்துவிடுவார் என நம்புகிறோம்.

இந்திய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஆஸி. தொடர் நல்ல வாய்ப்பாக அமையுமா?

எந்த வரிசையில் அவர்கள் விளையாடி இருக்கிறார்கள் என்பதெல்லாம் பிரச்சினையில்லை. அவர்கள் நிலைத்தன்மையுடன் பந்துவீசுகிறார்களா என்பதுதான் முக்கியம். கடந்த காலத்தில் ஒன்று அல்லது 2 பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி இருக்கலாம். ஆனால், 3 அல்லது 4 பந்துவீச்சாளர்கள் இருக்கும்போது, 5 மணிநேரத்துக்காவது நிலைத்தன்மையுடன் பந்து வீசுவது முக்கியம். நீண்ட காலத்துக்கு நிலைத்தன்மையான பந்துவீச்சை வெளிப்படுத்த இது வாய்ப்பு.

இவ்வாறு ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x