Published : 14 Nov 2018 08:11 PM
Last Updated : 14 Nov 2018 08:11 PM

6 சிக்சர்களுடன் அதிரடி 64: சாம் கரனின் இன்னிங்ஸினால் மீண்ட இங்கிலாந்து 285 ரன்கள்

கண்டியில் இலங்கை-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 285 ரன்களுக்குச் சுருண்டது. தொடர்ந்து ஆடிய இலங்கை 26/1 என்று முதல் நாள் ஆட்டத்தை முடித்துள்ளது.

கருணரத்னே 19 ரன்களுடனும் புஷ்பகுமாரா 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். ஹெராத் ஓய்வு பெற்றதால் இலங்கை அணி பலவீனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் ஸ்பின் ஆதிக்கமே அதிகம் இருந்தது.

சாம் கரன் இறங்கி முதல் 50 பந்துகளில் 10 ரன்கள்தான் அதன் பிறகு வெறி கொண்டு அடிக்க ஆரம்பித்தார், அதில் 6 சிக்சர்கள் வந்ததையடுத்து 1 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 119 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார்.

பல்லகிலே பிட்ச் ஸ்பின்னர்களுக்குச் சாதகமானது, ஆனால் முதல் நாளைக்கேவா என்றால்.. ஆம்! விழுந்த 11 விக்கெட்டுகளில் 10 விக்கெட்டுகள் ஸ்பின்னர்களுக்கே. ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 7வது டாஸை வென்றார், அதனைக் கொண்டாட பேட் செய்ய முடிவெடுத்தார். அவர் முடிவும் சரியானதே, எப்படி இருந்தாலும் 3 மணி நேரம் கழித்து, 4 மணி நேரம் கழித்து பிட்ச் உடைந்து விளையாடுவது கடினமானாலும் அந்த 3-4 மணி நேரம் பேட்டிங்கில் கொஞ்சம் ஸ்கோர் செய்து கொள்ளல்லாம். 2ம் நாள் 3ம் நாளெல்லாம் பிட்ச் எந்த மூடில் இருக்கும் என்று கணிப்பது கடினம்.

இந்நிலையில்தான் ஜெனிங்ஸ் வேகப்பந்து லக்மலிடம் 1 ரன்னில் வெளியேறினார்.

ஜோ பர்ன்ஸ் (43), பென் ஸ்டோக்ஸ் (19) இணைந்து ஸ்கோரை 44 ரன்களுக்குக் கொண்டு சென்றனர்.  திலுருவன் பெரேரா ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய பந்தை ஸ்டோக்ஸ் லைனைத் தவறாகக் கணித்து எல்.பி.ஆனார். நடுவர் ரவி நாட் அவுட் என்றார், ஆனால் ரிவியூவில் அவுட் என்று தெரியவந்தது.  ஜோ ரூட், இடது கை ஸ்பின்னர் புஷ்பகுமாரா பந்தில் மட்டை, கால்காப்புக்கு இடையே இடைவெளியினால் பவுல்டு ஆகி 14 ரன்களில் வெளியேறினார். பர்ன்ஸ் 43 ரன்களில் அகிலா தனஞ்ஜெயா பந்தில் ஸ்லிப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

ஜோஸ் பட்லர் இறங்கி ஸ்பின்னை ஸ்வீப் ஆடத் தொடங்கி ஆக்ரோஷம் காட்டினார்.  மொயின் அலி, 10 ரன்களில் ரூட் போலவே நேர் பந்தில் புஷ்பகுமாராவிடம் பவுல்டு ஆகி வெளியேறினார்.  கடந்த டெஸ்ட் அறிமுக விக்கெட் கீப்பிங் சத நாயகன் பென் ஃபோக்ஸ் 29 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் எடுத்து ஸ்பின்னை எப்படி ஆடுவது என்று பாடம் எடுத்துக் கொண்டிருந்த வேளையில் பெரேரா பந்தை ஸ்வீப் செய்து ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். நடுவர் அவுட் என்றவுடன் அவர் வெளியேறினார், ரிவியூ செய்யவில்லை, ரிவியூ செய்திருந்தால் அது நாட் அவுட். ஏனெனில் பந்து மட்டையில் படவில்லை. பேடில் பட்டுச் சென்றது.

ஜோஸ் பட்லர் தன் சக்தி வாய்ந்த ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப்களில் 67 பந்துகளில் 63 ரன்கள் எடுத்த நிலையில் புஷ்பகுமாரா பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்து தேவையில்லாமல் கேட்ச் ஆகி வெளியேறினார்.  இங்கிலாந்து 171/7 என்று மடிந்திருக்கும்.

ஆனால் ஆதில் ரஷீத் (52 பந்துகளில் 31), சாம் கரண் 45 ரன்கள் கூட்டணி அமைத்ததில் இங்கிலாந்து 200 ரன்களைப் பார்த்தது. ஆதில் ரஷீத், புஷ்பகுமாராவை இன்னிங்சின் முதல் சிக்சருக்குத் தூக்கினார். ஆனால் சாம் கரண் 50 பந்துகளில் 10 என்றிருந்தவர் வெறி கொண்டு சிக்சர்களாக அடித்துத் தள்ளினார், இதில் அகிலா தனஞ்ஜயாவை  எக்ஸ்ட்ரா கவரில் அடித்த சிக்ஸ் அற்புதம். ஆனால் அவர் 53 ரன்களில் இருந்த போது லாங் ஆஃபில் புஷ்பகுமாரா கேட்சை விட்டார். ரஷீத் 31 ரன்களில் பெரேராவிடம் வெளியேற, லீச் 7 ரன்களில் தனஞ்ஜெயாவிடம் பவுல்டு ஆனார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் 7 ரன்களுக்கு இலங்கையை 1 மணி நேரம் வெறுப்பேற்றினார். ஆனால் சாம் கரண் அதிரடியில் கடைசி விக்கெட்டுக்காக 60 ரன்கள் சேர்க்கப்பட்டது. கடைசி விக்கெட்டாக சாம் கரன் பெரேரா பந்தை லாங் ஆஃபில் தூக்கி அடித்து கேட்ச் ஆக இங்கிலாந்து 285 ரன்களை எட்டியது. இலங்கை தரப்பில் பெரேரா 4 விக்கெட்டுகள், புஷ்பகுமாரா 3 விக்கெட்டுகள்.  தனஞ்ஜயா 2 விக்கெட், ஆனால் சாம் கரன், பட்லரிடம் அதிகம் சிக்கிய தனஞ்ஜயா 14 ஓவர்கள்ல் 80 ரன்கள் விளாசப்பட்டார்.

இலங்கை ஆட்ட முடிவில் சில்வா விக்கெட்டை லீச்சின் ஸ்பின்னுக்கு இழந்து 26/1 என்று உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x