

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள கிரிக்கெட் டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்லும் என்று தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவண் நம்பிக்கை தெரிவித்தார்.
இதுதொடர்பாக இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான அணியில் நான் தேர்வு செய்யப்படவில்லை. இது எனக்கு சிறிது வருத்தத்தை அளித்தது. இருந்தும் நான் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து சென்றுவிட்டேன்.
நேர்மறையான விஷயங்களை ஏற்றுக்கொண்டு நடப்பவன் நான். நான் எனது விளையாட்டை மிகவும் ரசித்து விளையாடி வருகிறேன். டெஸ்ட் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடும். இந்த முறை இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறேன்.
பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்திலும் இந்திய அணி அபாரமாக செயல்பட்டு வருகிறது. 2019 உலகக் கோப்பைக்காக நான் தயாராகி வருகிறேன். இந்தப் போட்டிக்கு இன்னும் 6 மாதங்களே உள்ளது. எனவே அந்த போட்டியில் நான் எனது பங்களிப்பை சிறப்பாக செய்ய விரும்புகிறேன். இதற்காக நான் சிறந்த முறையில் பயிற்சி பெற்று வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.