

இங்கிலாந்து ஸ்பின் ஆலோசகரான முன்னாள் பாகிஸ்தான் ஆஃப் ஸ்பின்னர் சக்லைன் முஷ்டாக் ஏன் பெரிய ஜீனியஸ் என்று இங்கிலாந்து ஸ்பின் பவுலர் ஆல்ரவுண்டர் மொயீன் அலி விளக்கியுள்ளார்.
இலங்கைக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு அரிய வெற்றியை இங்கிலாந்து பெற்றதையடுத்து பெரு மகிழ்ச்சியில் மொயீன் அலி இங்கிலாந்து ஊடகத்தில் எழுதிய பத்தியில் சக்லைன் முஷ்டாக் பற்றி கூறியதாவது:
நான் 150 டெஸ்ட் விக்கெட்டுகள் மைல்கல்லைக் கடந்து விட்டேன். ஆனால் மைல்கல் ஒரு பிரச்சினையல்ல, நாட்டுக்காக ஆடுவதுதான் பெரியது. சவுத்தாம்ப்டனில் நான் அணிக்கு மீண்டும் திரும்பியது முதல் நல்லது நடந்து கொண்டிருக்கிறது. இடைவெளி என்னை புத்துயிர் பெறச் செய்தது.
டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு மீண்டும் வொர்ஸ்டர்ஷயருக்குச் சென்றேன். சில புதிய விஷயங்களை பவுலிங்கில் முயற்சி செய்தேன், இங்கிலாந்து பவுலிங் ஆலோசகர் சக்லைன் முஷ்டாக்கிடம் ஆலோசித்தேன். இப்போது என் பவுலிங் பற்றி எனக்கு அதிகம் தெரியவந்துள்ளது.
சக்லைன் எனக்கு ஒரு வரப்பிரசாதம், அனைத்து விதங்களிலும் அவர் எனக்கு உதவி புரிந்தார். உத்தி ரீதியாக, மன ரீதியாக என்பதுடன் பவுலிங் தந்திரங்கள் ரீதியாக நிறைய எனக்கு உதவினார். ஒரு ஆஃப் ஸ்பின் பயிற்சியாளராக அவர் ஒரு பெரிய ஜீனியஸ். எங்களுக்கு எப்போதும் புதிதாகக் கூறுவதற்கு அவரிடம் நிறைய இருந்தன.
அவருக்கு ஸ்பின் பந்து வீச்சு குறித்து ஏகப்பட்ட அறிவு இருக்கிறது, ஆனால் எங்களுக்கு அவையெல்லாம் கொஞ்சம் கூடுதல்தான். அவர் அதிகம் பேசினால் நாங்கள் குழம்பித்தான் போவோம்.
எங்களுடன் அவர் இருப்பது பெரிய பாக்கியம், ஸ்பின் பயிற்சியாளர்களில் அவர் மற்றவர்களை விட வேறொரு உயரத்தில் இருக்கிறார். இலங்கையில் நான், அடில் ரஷீத், ஜேக் லீச் ஆகியோர் சக்லைன் மற்றும் ஜோ ரூட்டுடன் அமர்ந்து திட்டமிட்டோம். இதுதான் உதவியது. நானும் ஜாக் லீச்சும் நிறைய ஓவர்கள் வீசி கட்டுப்படுத்துமாறும் ஆதில் ரஷீத் விக்கெட் எடுக்கும் பவுலர் என்பதால் அவருக்கு ஆதரவாக களம் அமைக்கவும் திட்டமிட்டோம் அது கை கொடுத்தது. இது மிகப்பெரிய வெளிநாட்டு வெற்றியாகும்.
இவ்வாறு கூறினார் மொயீன் அலி.