டான் பிராட்மேன் சராசரி நீங்கலாக விராட் கோலி அனைத்து சாதனைகளையும் உடைப்பார்: ஸ்டீவ் வாஹ்

டான் பிராட்மேன் சராசரி நீங்கலாக விராட் கோலி அனைத்து சாதனைகளையும் உடைப்பார்: ஸ்டீவ் வாஹ்
Updated on
1 min read

சாதனைகளை உடைத்து வரும் கிங் கோலி டான் பிராட்மேனின் சராசரி சாதனை நீங்கலாக அனைத்து சாதனைகளையும் உடைத்தெறிவார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஸ்டீவ் வாஹ் தெரிவித்துள்ளார். பிராட்மேனின் சராசரி 99.99.

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் ஸ்டீவ் வாஹ் கூறியதாவது:

அவரிடம் கிரிக்கெட் மீதான நேயம், பற்றுதல், சாதிக்கும் வெறி, உடல்தகுதி, ஆர்வம், தீவிரம் அனைத்தும் உள்ளன. கடுமையாக ஏதும் காயமடையாமல் இருந்தால் அவர் அனைத்து சாதனைகளையும் உடைத்தெறிவார் என்றே கருதுகிறேன். பிராட்மேன் சராசரியை முறியடிப்பது கடினம்.

அனைவரும் விராட் கோலியைப் புகழ்வதற்குக் காரணம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம்தான். டெஸ்ட் கிரிக்கெட் அழியக் கூடாது என்பதற்காகத் தான் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனவரி 2016லிருந்து விராட் கோலி 7,824 ரன்களுடன் உலகின் அதிக ரன்களை எடுத்தவராக தற்போது திகழ்கிறார். இவருக்கு சற்று தொலைவில் ஜோ ரூட் இதே காலக்கட்டத்தில் 6,371 ரன்கள் எடுத்துள்ளார்.

மேலும் அவரது 38 ஒருநாள் சதங்களில் 28 சதங்கள் கடந்த 2 ஆண்டுகளில் வந்தது.

இவ்வாறு அனைத்து வடிவங்களிலும் கோலி தன் பேட்டிங்கில் சாதித்து வருவதால் அனைவராலும் புகழப்படுகிறார். முன்னதாக பிரையன் லாரா, தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் ஆகியோரும் கோலியை புகழ்ந்தனர்,

அதிலும் குறிப்பாக கிரேம் ஸ்மித், விராட் கோலியை ‘சூப்பர் ஸ்டார்’ என்றே அழைத்துள்ளார், இந்நிலையில் ஸ்டீவ் வாஹும் இந்த கோலி புகழாரத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in