

மும்பை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சவ்ரப் நெட்ராவல்கர், அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக் கழகத்தில் கணினி பொறியியல் படிப்புக்காக கிரிக்கெட்டைத் துறந்தவர். தற்போது அமெரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனாகியுள்ளார்.
இவர் 6 அடி உயரமுள்ள இடது கை வேகப்பந்து வீச்சாளர். 2010 யு-19 உலகக்கோப்பையில் இந்திய அணியில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர். இவர் வீழ்த்திய முக்கிய விக்கெட்டுகளில் ஜோ ரூட், பாகிஸ்தானின் அகமெட் ஷேசாத் முக்கியமானவர்கள் ஆவர்.
3 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை அணிக்காக தன் ஒரே ரஞ்சி போட்டியில் கர்நாடகாவுக்கு எதிராக ஆடி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஆனால் நெட்ராவல்கர் தன் எதிர்காலம் குறித்து திருப்தியடையவில்லை. “நான் 2 ஆண்டுகள் கிரிக்கெட்டுக்காக அர்ப்பணித்தேன், ஆனால் அடுத்த கட்டத்துக்கு நகர முடியவில்லை” என்று டைம்ஸ் ஆப் இந்தியா இதழுக்குத் தெரிவித்துள்ளார்.
சர்தார் படேல் தொழில்நுட்ப கல்லூரியின் பொறியியல் பட்டம் வென்ற மாணவரான இவர் பிறகு அமெரிக்கா செல்வதற்கான கடினமான ஜிஆர்இ மற்றும் டாஃபல் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று கார்னெல் பல்கலையில் தன் கணினி தொழில்நுட்ப மேற்படிப்புக்காகச் சென்றார்.
தற்போது அமெரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனாக 2வது இன்னிங்சை தொடங்குகிறார்.