

சிட்னியில் நடைபெற்ற முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலியாவை 164 ரன்களுக்கு மட்டுப்படுத்திய இந்திய அணி பிறகு ரோஹித், தவண் காட்டடி தொடக்கம், பிறகு விராட் கோலி, தினேஷ் கார்த்திக் பினிஷிங்கில் வெற்றி பெற்று தொடரைச் சமன் செய்தது.
ஆஸ்திரேலிய அணியில் ஸாம்பா, ஸ்டார்க் தவிர மற்ற பவுலர்களுக்கு விளாசல் விழுந்தது.
இந்நிலையில் போட்டி முடிந்து விராட் கோலி கூறியதாவது:
பந்து வீச்சில் இன்று தொழில்நேர்த்தியுடன் வீசினோம் என்று கருதுகிறேன். இது 180 ரன்களுக்கான பிட்ச், ஆகவே 164 ரன்களுக்கு ஆஸி.யை மட்டுப்படுத்தியது, அந்த 15 ரன்கள் இடைவெளி மிக முக்கியப் பங்காற்றியது. சமன் ஆன தொடர் இரு அணிகள் மிகப்பிரமாதமான கிரிக்கெட் ஆட்டத்தை ஆடியதற்கான உதாரணமாகும்.
ரோஹித் சர்மாவும் ஷிகர் தவணும் தொடக்கத்தில் அப்படி அடித்து ஆடியதால் எளிதாக அமைந்தது. முடிவில் தினேஷ் கார்த்திக் மிக நேர்த்தியாக ஆடினார், பொறுமையுடன் அணுகினார். நானும் அவரும் பார்ட்னர்ஷிப் வைத்ததால் வெற்றி எளிதானது.
ஆஸி. அணியில் மேக்ஸ்வெல், ஸாம்ப்ப நன்றாக வீசினர். ஆனால் ஒட்டுமொத்தமாக திறமை அளவில் ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி சிறந்து விளங்கியதாகவே கருதுகிறேன்.
இவ்வாறு கூறினார் விராட் கோலி.