Published : 20 Nov 2018 09:10 PM
Last Updated : 20 Nov 2018 09:10 PM

ஆஸி. பலவீனமான அணியா? இந்தியாதான் வெற்றி பெறும் அணியா? நாளை தொடங்குகிறது முதல் டி20

ஆஸ்திரேலிய அணியின் களத்தில் உள்ள பிரச்சினை, களத்திற்கு வெளியே உள்ள பிரச்சினை ஆகியவற்றால் அது பலவீனமாகக் காட்சியளிக்கிறது.  மாறாக இந்திய அணி பலம்பொருந்திய அணியாகத் திகழ்வதால் இந்தியாவே வெற்றி பெறும் என்று கணிப்புகள் கூறுகின்றன.

நாளை பிரிஸ்பன் மைதானத்தில் முதல் டி20 போட்டி நடைபெறுகிறது.  டெஸ்ட் போட்டிக்கு தயாராக வேண்டுமென்று முக்கிய வீச்சாளர்களான ஸ்டார்க் ஹேசில்வுட். பேட் கமின்ஸ், நேதன் லயன், ஆகியோர் டி20 அணியில் இல்லை.

ஆனால் வலுவான பந்து வீச்சு இருந்தும் பாகிஸ்தானுக்கு எதிராக 3-0 என்று உதை வாங்கியது ஆஸ்திரேலியா.  அடுத்தபடியாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ரபாடா, இங்கிடி, ஸ்டெய்ன் பவுன்சுக்கு ஆஸ்திரேலியா தங்கள் மண்ணிலேயே இரையானது. ஆஸ்திரேலியா பேட்டிங்கும் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியில்லை, எனவே ஜஸ்பிரீத் பும்ரா, கலீல் அகமெடும் கூட ஆஸ்திரேலிய அணியை ஒட்டுமொத்தமாகச் சாய்க்க வாய்ப்புண்டு.

இந்திய அணியில் பாவம் தினேஷ் கார்த்திக்கிற்கு மே.இ.தீவுகளுக்கு எதிராக ரிஷப் பந்த்திற்கு அளித்த வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை, என்னதான் விராட் கோலியும் ரவிசாஸ்திரியும் சமவாய்ப்புகள் குறித்து வாய்கிழிய பேசினாலும் கார்த்திக்கிற்கு அவருக்கு கொடுக்கத் தகுதியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்பதே உண்மை. ஒரு புறம் தோனி புராணம் பாடும் ஊடகங்கள், இன்னொரு புறம் தோனிக்குப் பிறகு ரிஷப் பந்த்தான் என்று லாவணி பாடும் அதே ஊடகங்களினால் தினேஷ் கார்த்திக் இடையில் சிக்கிக் கொண்டிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் சரிவு:

பால்டேம்பரிங் நிகழ்வுகளுக்குப் பிறகு வார்னர், ஸ்மித் இல்லாமல் குறிப்பிடப்படும்படியான ஒரு வெற்றி என்றால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி வெற்றியே.

ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியிலும், பாகிஸ்தானுக்கு எதிராக 3-0 என்றும் முன்னதாக ஜிம்பாப்வேயில் நடந்த முத்தரப்பு டி20 தொடரின் இறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக உதைகளையும் வாங்கி ஆஸ்திரேலியா அலுத்துப் போயுள்ளது.

இந்நிலையில் சொந்த மண்ணில் ஆக்ரோஷமான தங்கள் ரசிகர்கள் முன்னிலையில் இந்திய அணிக்கு எதிராக இவர்கள் உணர்வு எழுச்சி பெறலாம்.

விராட் கோலி, ரோஹித் சர்மா ஆதிக்கம்:

கடந்த 2016 ஆம் ஆண்டு டி20 தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு 3-0 என்று ஒயிட் வாஷ் கொடுத்த போது விராட் கோலி 3 போட்டிகளில் 199 ரன்களை விளாசியது நினைவிருக்கலாம்.

அதே போல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சமீபமாக குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டில் அதிகரன்களை குவித்தவர் என்ற பெருமையுடையவர் ரோஹித் சர்மா. இவருக்கு பெரிய மைதானங்களில் ஷார்ட் பிட்ச் போட்டு சோதிப்போம் என்று கூல்ட்டர் நைல் அன்று தெரிவித்துள்ளார், இது ஒரு சுவாரசியமான போட்டியாக மிளிர வாய்ப்புள்ளது.

மேலும் கே.எல்.ராகுல் மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக 16, 26, 17 என்ற ஸ்கோர்களுடன் சொதப்பியதால் அவர் எப்படி ஆடுவார் என்று தெரியவில்லை.  ஆனால் அவர்தான் ஆடுகிறார்.   ‘வாயில்லா ஜீவன்’ மணீஷ் பாண்டே ஆட மாட்டார்.

ஆஸ்திரேலிய அணியில் பிஞ்ச், மேக்ஸ்வெல் அனுபவத்துக்கு அடுத்தபடியாக இளம் திறமைகள்தான் உள்ளன, டி ஆர்க்கி ஷார்ட்,  லின், ஸ்டாய்னிஸ், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஆகியோர் உள்ளனர். பவுலிங்கில் நேதன் கூல்டர் நைல் அனுபவசாலி, ஆண்ட்ரூ டை, பில்லி ஸ்டான்லேக் ஐபிஎல் பவுலர்கள் என்பதால் இந்திய பேட்ஸ்மென்கள் பற்றி அறிந்தவர்கள், ஆகவே நல்ல விறுவிறுப்பான போட்டியாக இருக்கும் என்று ஒரு ஐயத்துடன் தான் கூற முடிகிறது, காரணம் சமீபகாலங்களாக ஆஸ்திரேலியா வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சைக்கிள்களில் ஒன்றைத் தட்டினால் வரிசையாக விழுமே அதுபோல் சரிவடைவதைத்தான் பார்த்து வருகிறோம்.

ஆகவேதான் நிபுணர்கள், ஊடகங்கள் இந்தியாதான் வெற்றி பெறும் என்று கூறுகின்றனர், ஆஸி. அணி பலவீனமான அணியா? இந்தியாதான் வெற்றி பெறும் அணியா? பார்ப்போம். நாளை மதியம் 1.20க்கு இந்தப் போட்டி தொடங்கும்.

இந்திய அணி விவரம்:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவண், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், குர்னல் பாண்டியா, குல்தீப் யாதவ், யஜூவேந்திர சாஹல், கலீல் அகமது, புவனேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா.

ஆஸ்திரேலிய அணியில் விளையாடும் 12 பேர் கொண்டஅணி அறிவிக்கப்படவில்லை என்கிற போதிலும், டி20 போட்டிக்கான அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.

ஆஸி. வீரர்கள் விவரம்:

ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஏ.சி.ஆகர், பெஹ்ரண்டார்ப், ஏ.டி.கேரி, கூல்டர் நீல், லின், மெக்டர்மாட், மேக்ஸ்வெல், டி.எம். ஷார்ட், ஸ்டான்லேக், ஸ்டோய்னிஸ், ஆன்ட்ரூ டை, ஜம்பா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x