Published : 03 Nov 2018 08:48 AM
Last Updated : 03 Nov 2018 08:48 AM

ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: வெற்றி பாதைக்கு திரும்புமா சென்னையின் எப்சி?- மும்பை அணியுடன் இன்று மோதல்

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்சி அணி, மும்பை சிட்டி எப்சி அணியுடன் மோதுகிறது.

நடப்பு சாம்பியனான சென்னை அணி இந்த சீசனில் இதுவரை ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை. 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 4 தோல்விகளை சந்தித்துள்ள நிலையில் ஒரு ஆட்டத்தை டிராவில் முடித்திருந்தது.

இதனால் ஒரே ஒரு புள்ளியுடன் பட்டியலில் 9-வது இடம் வகிக்கிறது சென்னை அணி. சொந்த மண்ணில் நடைபெற்ற ஆட்டங்களில் சென்னை அணி டிபன்ஸ் பலவீனங்களால் தோல்விகளை சந்தித்தது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பாதைக்கு திரும்புவதற்கான முயற்சிகளில் பயிற்சியாளர் ஜான் கிரகோரி தீவிரம் காட்டக்கூடும்.

நடுகள வீரரான தனபால் கணேஷ் காயம் காரணமாக இந்த சீசனில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது சென்னை அணியின் திட்டங்களை வெகுவாக பாதித்துள்ளது. அவர், இடத்துக்கு நகர்த்தப்பட்டுள்ள இனிகோ கால்டிரானும் எதிர்பார்த்த அளவுக்கான திறனை வெளிப்படுத்தவில்லை.

கடந்த சீசனில் டிபன்ஸ் பலம் வாய்ந்த அணியாக அறியப்பட்ட சென்னை அணி இம்முறை 5 ஆட்டங்களில் 10 கோல்களை வாங்கியுள்ளது. இதனால் தற்காப்பு ஆட்டத்தை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது.

ஜெ ஜெ லால்பெகுலாவுக்கு மாற்றாக களமிறக்கப்பட்டுள்ள கார்லோஸ் சலோமிடம் இருந்து பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான ஆட்டம் வெளிப்படாததும் அணிக்கு பின்னடைவாக உள்ளது. இன்றைய ஆட்டத்தில் ஜெ ஜெ லால்பெகுலாவை பிரதான லெவனில் களமிறக்குவது குறித்து சென்னை அணி நிர்வாகம் ஆலோசிக்கக்கூடும். விங்கர்களான தோய் சிங், இசாக் ஆகியோரும் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டத்தில் உள்ளனர்.

மும்பை அணி 5 ஆட்டங்களில் 2 வெற்றி, 2 தோல்வி, ஒரு டிராவுடன் 7 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடம் வகிக்கிறது.

இந்த சீசனில் அந்த அணி ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கோவா அணிக்கு எதிராக 5-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த மும்பை அணி அதன் பின்னர் மீண்டெழுந்து தனது கடைசி ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றியை பதிவு செய்திருந்தது.

இந்த ஆட்டத்தில் கோல் அடித்த அர்னால்டு இஸ்கோ, மோடு சோகு ஆகியோர் சென்னை அணிக்கு சவால் கொடுக்கக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x