

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்கு ரவி சாஸ்திரியை அணி இயக்குனராக நியமித்ததைப் பாராட்டிய ஜெஃப் பாய்காட், பயிற்சியாளர் டன்கன் பிளெட்சர் மீது தனது கேலி விமர்சனத்தைத் தொடுத்துள்ளார்.
"நான் டன்கன் பிளெட்சரை ஒரு போதும் பெரிய அளவுக்கு ஆதரிப்பவன் அல்ல. மனிதருக்கு சிரிக்கவே தெரியாது. முசுட்டுத் தோற்றம் உடையவராக இருக்கிறார். எப்போதும் வலியில் இருப்பவர் போலவே அவர் இருக்கிறார்.
மனிதர், தான் நேசிக்கும் வேலையைச் செய்வதற்கு நிறைய பணம் அளிக்கப்படுகிறது, ஆகவே கொஞ்சம் வேடிக்கை, விளையாட்டு ஆகியவை தேவை. அவரது முசுட்டுத்தனம் நிச்சயம் இந்திய அணியின் ஆட்டத்தைப் பாதிக்கிறது என்று நான் நம்புகிறேன்.
இந்திய அணியில் ஆரோக்கியமான சில இளம் வீரர்கள் உள்ளனர், அவர்கள் தங்களது ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும். இவரது வேதனை வீரர்களிடத்திலும் பிரதிபலிக்கிறது.
ரவி சாஸ்திரி இந்திய வீர்ர்கள் முகத்தில் புன்னகையைக் கொண்டு வர வேண்டும். மேலும் கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் சொந்த நாட்டிலிருந்தே பயிற்சியாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.
ரெய்னாவுக்குப் பாராட்டு:
கார்டிப்பில் ரெய்னா விளையாடியது மிகவும் பிரமாதம். இங்கிலாந்து ரசிகர்களே அவரது பேட்டிங்கை ரசித்தனர். இந்த அணியிடம் எழுச்சி தெரிகிறது. இந்திய அணியின் டெஸ்ட் தோல்விகளுக்குப் பிறகு ரெய்னா அந்த அணிக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் கூட அவரை வைத்துக் கொண்டிருக்கலாம் என்கிற அளவுக்கு அவரது பேட்டிங்கில் முதிர்ச்சி இருந்தது.
விராட் கோலி மூளையைப் பயன்படுத்த வேண்டும்:
விராட் கோலி டெஸ்ட் சொதப்பல்களுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் பந்திலிருந்தே அடித்து ஆடவேண்டும் என்ற முடிவு எடுத்துவிட்டார் போலும். அவரது அந்த ஷாட் அப்படித்தான் என்னை யோசிக்க வைக்கிறது.
சாதுரியமற்ற திறமை விரயம்தான். விராட் கோலி மூளையைப் பயன்படுத்த வேண்டும். அவர் அளவுக்குத் திறமையான ஒருவீரர் இவ்வாறு அவுட் ஆவதில்லை.
ஆகவே கோலி அமைதியாக சிந்தித்து, அவர் எப்படி வழக்கமாக ஆடுவாரோ அப்படி ஆடி மெதுவாக ஃபார்முக்கு வர முயற்சி செய்ய வேண்டும். அதை விடுத்து ஒவ்வொரு ஷாட்டிலும் ஏதாவது தான் நிரூபிக்க வேண்டும் என்று அவர் யோசித்தல் கூடாது.
இவ்வாறு ஜெஃப் பாய்காட் ஆங்கில இணையதள பத்தி ஒன்றில் தெரிவித்துள்ளார்.