Published : 10 Nov 2018 09:22 PM
Last Updated : 10 Nov 2018 09:22 PM

இன்னும் 69 ரன்கள்தான்; ரோஹித் சர்மா நாளை வரலாற்று சாதனை படைப்பாரா?

இந்திய டி20 அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டி20 வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டுவதற்கு இன்னும் 69 ரன்கள் மட்டுமே தேவை. சென்னையில் நாளை நடைபெறும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டியில் அந்தச் சாதனையை அவர் எட்டுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டி20 போட்டியில் 4 சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற புதிய வரலாற்றுக்குச் சொந்தக்காரராக திகழ்ந்து வருகிறார். தற்போது விராட் கோலி இல்லாத நிலையில், டி20 தொடருக்கு கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டு வருகிறார். தற்போது டி20 போட்டியில் ரோஹித் சர்மா 2,203 ரன்கள் சேர்த்து அதிகமான ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார்.

முதலிடத்தில் நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் 2,271 ரன்கள் சேர்த்து முதலிடத்தில் உள்ளார். அவரின் சாதனையை முறியடிக்க ரோஹித் சர்மாவுக்கு இன்னும் 69 ரன்கள் மட்டுமே தேவை. நாளை நடக்கும் 3-வது டி20 போட்டியில் ரோஹித் சர்மா இந்தச் சாதனையைப் படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடந்து வரும் இந்த டி20 தொடரில் விராட் கோலியின் (62போட்டி) 2,102 ரன்கள், பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக்கின் 2,190 ரன்கள் சாதனையையும் ரோஹித் சர்மா முறியடித்து 2-வது இடத்தில் உள்ளார்.

சோயிப் மாலிக்குக்கு அடுத்த இடத்தில் நியூசிலாந்து வீரர் பிரன்டன் மெக்கலம் 71 போட்டிகளில் 2,140 ரன்கள் சேர்த்து 4-வது இடத்தில் உள்ளார். கோலி 5-வது இடத்தில் உள்ளார்.

ரெய்னா (1,605), தோனி (1,487), யுவராஜ் சிங் (1,177) ரனகள் சேர்த்துள்ளனர்.

டி20 போட்டியில் தொடக்க வீரர்கள் கூட்டணியில் 39 இன்னிங்ஸில் 1,268 ரன்கள் சேர்த்து ரோஹித் சர்மா, ஷிகர் தவண் கூட்டணி முதலிடத்தில் உள்ளனர். இவர்களுக்கு அடுத்த இடத்தில் ஆஸியின் வார்னர், வாட்ஸன் கூட்டணி 37 இன்னிங்ஸில் 1,154 ரன்கள் சேர்த்துள்ளனர்.

இந்த ஆண்டில் மட்டும் ரோஹித் சர்மா 19 இன்னிங்ஸில் 1,030 ரன்களும், கோலி 14 போட்டிகளில் 1,242 ரன்களும் சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x