Published : 19 Nov 2018 05:47 PM
Last Updated : 19 Nov 2018 05:47 PM

இந்திய வம்சாவளி ஸ்பின்னரிடம் சுருண்ட பாகிஸ்தான்: பரபரப்பான டெஸ்ட்டில் நியூஸி. நம்ப முடியாத வெற்றி

அபுதாபியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 4ம் நாளான இன்று பாகிஸ்தான் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் பரபரப்பான கடைசி நிமிடங்களில் வீழ்த்தி நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

வெற்றிக்கு 176 ரன்கள் தேவை என்ற நிலையில் இன்று 37/0 என்று வலுவாகத் தொடங்கிய பாகிஸ்தான் அணி அஜாஸ் யூனுஸ் படேல் என்ற இந்திய வம்சாவளி இடது கை ஸ்பின்னரிடம் சுருண்டு 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, அறிமுக போட்டியில் ஆடும் படேல் 59 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, இஷ் சோதி, மற்றும் வாக்னர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பாபர் ஆஸம் ரன் அவுட்டிலும் படேலின் பங்களிப்பு உண்டு.

அசார் அலி கடைசி வரை நின்று 65 ரன்கள் சேர்த்தார், பாகிஸ்தான் வெற்றிக்குப் பாலமாகவும், நியூசிலாந்து வெற்றிக்கு இடையூறாகவும் அசார் அலி நின்று கொண்டிருந்தார், கடைசி வீரர் மொகமது அப்பாஸை வைத்துக் கொண்டு ஒன்று ஒன்றாக எடுத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் படேலின் 5வது விக்கெட்டாக அறிமுக வீரரின் பரிசு விக்கெட்டாக, பாகிஸ்தான் தலையில் இடிவிழும் கடைசி விக்கெட்டாக எல்.பி.ஆகி வெளியேறினார் அசார் அலி, நடுவர் அவுட் கொடுத்ததால் அது அம்பயர்ஸ் கால் ஆனது, நடுவர் அவுட் தரவில்லை எனில் அவுட் ஆகியிருக்காது, ஆனால் அது மிகச்சரியான ஒரு தீர்ப்பு என்பது ரீப்ளேயில் தெரிந்தது.

இதற்கு முன்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹோபார்ட்டில் இதே போன்று 241 ரன்களை வைத்துக் கொண்டு ஆஸ்திரேலியாவை 233 ரன்களுக்குச் சுருட்டியது நியூசிலாந்து, இத்தனைக்கும் டேவிட் வார்னர் 123 நாட் அவுட்டாக இருந்தும் ஆஸி.யினால் வெற்றிக் கோட்டைக் கடக்க முடியாமல் போனது.

இப்போது பாகிஸ்தான் 176 ரன்களை எடுக்க முடியாமல் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.

உணவு இடைவேளையின் போது இழ்ந்த விக்கெட், திருப்பு முனையாக மாறும் என்று எதிர்பாராத பாகிஸ்தான்!

இத்தனைக்கும் உணவு இடைவேளை நெருங்கும் போது பாகிஸ்தான் அணி 130/3 என்று வெற்றிப்பாதையில் பயணித்துக் கொண்டிருந்தது. உணவு இடைவேளைக்கு சற்று முன்னர் 45 ரன்கள் எடுத்திருந்த ஆசாத் ஷபீக், இடது கை வேகப்பந்து வீச்சாளர் வாக்னர் வீசிய வெளியே சென்ற பந்தை கால்களை நகர்த்தாமல் மட்டையை மட்டும் நீட்டியதால் எட்ஜ் ஆகி வெளியேற 130/4 என்பதுடன் உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது. 

முதல் நாள் ஸ்கோரான 37/0 என்று வலுவாகத் தொடங்கிய பாகிஸ்தான் அணி 8 பந்துகளில் விரைவு கதியில் 3 விக்கெட்டுகளை இழந்தது. எளிதான இலக்கை எளிதாக எட்டிவிட்டால் நாங்கள் பாகிஸ்தான் இல்லை என்று கூறிவிடுவார்களோ என்ற பதற்றம் அந்த விக்கெட்டுகளில் தெரிந்தது. இமாம் உல் ஹக் (27) முதலில் எல்.பி.ஆகி படேலிடம் வெளியேறினார்.

பிறகு லெக் ஸ்பின்னர் இஷ் சோதி, மொகமது ஹபீஸ் (10) விக்கெட்டை வீழ்த்தினார், கவர் திசையில் கேட்ச் ஆனார் ஹபீஸ். இஷ் சோதி இதே ஓவரில் ஹாரிஸ் சொஹைல் (40 விக்கெட்டையும் அள்ளினார், புல்டாஸ் பந்தை நேராக இவரிடமே கேட்ச் கொடுத்தார் சொஹைல்.

இந்த பரபரப்புகளுக்கு இடையே அசார் அலியும் ஆசாத் ஷபீக்கும் இணைந்து 82 ரன்கள் சேர்த்து வெற்றி நம்பிக்கையுடன் 130 ரன்களுக்குக் கொண்டு சென்றனர், இன்னும் 46 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் உணவு இடைவேளையைக் கருத்தில் கொள்ளாமல் ஆசாத் ஷபிக் மோசமான ஷாட்டில் வாக்னரிடம் வெளியேறினார்.  பாபர் ஆஸம்  13 ரன்களில் ரன் அவுட் ஆனார். பந்து மட்டை உள்விளிம்பில் பட்டு ஷார்ட் பைன் லெக்கிற்குச் செல்ல பாபர் ஓடினார், பிறகு நின்றார், ஆனால் அசார் அலி பேட்டிங் முனைக்கு வேகமாக வந்தார், த்ரோ ரன்னர் முனைக்கு வர பாபர் ஆஸம் பரிதாப ரன் அவுட்.

கேப்டன் சர்பராஸ் அகமது பொறுமை காக்காமல் ஸ்வீப் முயற்சியில் 3 ரன்களில் படேலிடம் ஆட்டமிழக்க, பிலால் ஆசிப், யாசிர் ஷா, ஹசன் அலி ஆகியோர் வரிசையாக ரன் எடுக்காமல் டக் அவுட் ஆக 164/9 என்று ஆனது.

மொகமது அப்பாஸ் 10 பந்துகள் நின்றார். சிங்கிள் சிங்கிளாக எடுத்தார் அசார் அலி, இடையில் ஒருமுறை மிகப்பெரிய கேட்ச் அப்பீலில் அப்பாஸ் தப்பினார். ஆனால் வெற்றிக்கு 4 ரன்கள் இருக்கும் போது அசார் அலியை படேல் வீழ்த்தினார். 171 ஆல் அவுட். நியூஸிலாந்து வெற்றிக் கொண்டாட்டம் போட அசார் அலி கடும் ஏமாற்றமடைந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 2வது மிகக்குறைந்த இலக்கை வெற்றிகரமாகத் தடுத்து நியூஸிலாந்து அபார வெற்றி பெற்றது.  ஆட்ட நாயகனாக அஜாஸ் படேல் தேர்வு செய்யப்பட்டார்.

ஸ்கோர் விவரம்: பாகிஸ்தான் 227 மற்றும் 171, நியூஸிலாந்து 153 மற்றும் 249.  3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அபாரமாக நியூஸிலாந்து 1-0 என்று முன்னிலை வகிக்கிறது..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x