Published : 07 Nov 2018 09:06 AM
Last Updated : 07 Nov 2018 09:06 AM

ரோஹித் சர்மா உலக சாதனை சதத்துடன் மே.இ.தீவுகளை ஊதி டி20 தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி

61 பந்துகளில் 8 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 111 ரன்கள் எடுத்து 4வது டி20 சதமெடுத்த முதல் வீரர் என்ற உலக சாதனையை ரோஹித் சர்மா நிகழ்த்த இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகளை வீழ்த்தி டி20 தொடரை 2-0 என்று வென்றது. 

ரோஹித் இன்னிங்சின் சிறப்பம்சம் என்னவெனில் பெரிய பெரிய பவுண்டரியாக இருந்தாலும் பிரமாதமான சிக்ஸ் ஹிட்டிங் திறமைகளை வெளிப்படுத்தினார். அனைத்தும் பிரமாதமான சிக்சர்கள், கண்கொள்ளாக் காட்சி.

லக்னோவில் எகனா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியான இதில் தீபாவளி தினத்தில் பல தீபங்களை ஏற்றினார் ரோஹித் சர்மா.  புதிய பிட்ச் எப்படி நடந்து கொள்ளும் என்று தெரியாத நிலையில் மிகப்பெரிய பவுண்டரிகளை (75 மீ) அனாயசமாகக் கந்து 7 சிக்சர்களை விளாசினார் ரோஹித் சர்மா.  எதிர்முனையில் ஷிகர் தவன் 41 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 43 ரன்கள் எடுத்தார், ஆனால் ஷிகர் தவண் பேட்டிங் காலி, அவ்வளவுதான் என்பது போல் ஆடினார். இந்திய அணி 20 ஓவர்களில் 195/2 என்று குவிக்க தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் 124/9 என்று மடிந்தது.

குமார், கலீல், பும்ரா, குல்தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

மே.இ.தீவுகள் அணி பரிதாபம்தான், 2 கேட்ச்களை விட்டனர், வைடுகள், நோ-பால்கள், மிஸ்பீல்ட்கள் என்பதும் ரோ ‘ஹிட்’ சர்மாவுக்கு சாதகமானது.  08:29 07-11-2018 பவர் ப்ளேயில் ஸ்பின்னை வீசச் செய்தது என்று மே.இ.தீவுகள் கேப்டன் பிராத்வெய்ட் தவறுகள் பல இழைத்தார்.  ஆனால் ஒஷேன் தாமஸ் ஒரு பந்தில் மணிக்கு 150 கிமீ வேகம் தொட்டார்.

முதலில் மெய்டன் ஓவர் ஒன்றை விட்டார் ரோஹித் சர்மா, முதல் 3 ஒவர்களில் பவுண்டரியே வரவில்லை, ஸ்பின் வந்த பிறகு  இடது கை ஸ்பின்னர் கேரி பியரைத் தூக்கி மிட் ஆஃப் மேல் அடித்தார் ரோஹித் பெரிய ரசிகர் கூட்டம் சற்றே ஏமாற்றமடைந்து ரோஹித் பெயரைக் கூறி கத்திக் கொண்டிருந்தது.  5வது ஓவரில் தாமஸை சற்றே லெக் திசையில் ஒதுங்கிக் கொண்டு லாங் ஆஃபின் மேல் 75 மீ பவுண்டரியைக் கடந்து சிக்ஸ் அடித்தார் ரோஹித் சர்மா, மிகப்பெரிய ஷாட், தாமஸே கொஞ்சம் ஆடித்தான் போனார். இதே ஓவரில் ஷிகர் தவண் 2 பவுண்டரிகளை அடித்தார்.

பிறகு கேரி பியர் மிட் ஆஃபைப் பின்னுக்குத்தள்ள ரோஹித் சர்மா இம்முறை லாங் ஆன் மேல் சிக்ஸ் அடித்தார். 6 ஓவர்கள் பவர் ப்ளே முடிவில் இந்தியா 49/0 , பிறகு ஆலன் தன் பந்து வீச்சில் ரோஹித் சர்மாவுக்கு ஒரு கேட்சை விட்டார். அடுத்த ஓவரிலேயே ஷிகர் தவணுக்கு கீமோ பால் நேரடியான கேட்சை விட்டார். கேட்ச் விட்டது கொடுமை அல்ல மீண்டும் ரோஹித் சர்மா ஸ்ட்ரைக்குக்கு வந்த போது பிராத்வெய்ட் பந்தை புல் ஷாட்டில் சிக்ஸ் அடித்தார். பிறகு மீண்டும் ஒரு மிட்விக்கெட் புல்ஷாட் நான்கு ரன்கள் என்று ரோஹித் புகுந்து விளையாடினார். 38 பந்துகளில் அரைசதம் கடந்தார். பிறகு ஆலன் ஓவரில் ஸ்லாக் ஸ்வீப்பில் 80மீ பவுண்டரியை அனாயசமாகக் கடந்து செல்லுமாறு சிக்சரை விளாசினார், அடுத்த பந்து மிட்விக்கெட்டில் மிகப்பெரிய சிக்ஸ். பீல்டர்கள் வேடிக்கைத்தான் பார்க்க முடிந்தது.

இன்னொரு கேட்சையும் ஆலன் கோட்டை விட்டார். 43 ரன்களில் ஒருமாதிரியான தடுமாற்றமான இன்னிங்சில் தவண் வெளியேறினார். ரிஷப் பந்த் 5 ரன்களில் மிட்விக்கெட் பவுண்டரியில் கேட்ச் ஆகி பியரிடம் வெளியேறினார். இந்த 2 விக்கெட்டுகளுக்குப் பிறகு ரோஹித் ராஜ்ஜியம்தான், ராகுல் இறங்கி 2 பவுண்டரிகளுடன் தொடங்கினார்.  பிறகு பியர் ஓவரில் ரோஹித் சர்மா மீண்டும்  நேராக ஒரு சிக்ஸ் பிறகு ஒருகையில் ஒரு பவுண்டரி என்று திகைக்க வைக்கும் பேட்டிங்கை ஆடினார். ராகுலுக்கும் ஒரு கேட்சை பொலார்ட் லாங் ஆனில் விட்டார்.

20வது ஓவரில் பிராத்வெய்ட் பந்தில் ஒரு எட்ஜ் பவுண்டரி அடித்த ரோஹித் சர்மா,  ஸ்கூப் ஷாட்டில் லாங் லெக் திசையில் மற்றுமொரு பவுண்டரி அடித்து 4வது டி20 சதமெடுத்த ஒரே வீரர் என்ற சாதனையை 58 பந்துகளில் நிகழ்த்தினார். சதத்தைக் கொண்டாட பிராத்வெய்ட்டை மீண்டும் லாங் ஆனில் ஒரு சிக்ஸ் தூக்கினார் ரோஹித்.

கடைசியில் 61 பந்துகளில் 111 நாட் அவுட், ராகுல் 14 பந்துகளில் 26 நாட் அவுட். இந்திய அணி 195/2. மே.இ.தீவுகள் தரப்பில் ஒஷேன் தாமஸ் சிறப்பாக வீசி 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். அதிகபட்சமாக பிராத்வெய்ட் 4 ஓவர்களில் 56 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

மே.இ.தீவுகள் சரிவு:

இலக்கை விரட்டக் களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி துல்லியமான கலீல் அகமெட் பந்து வீச்சை அடிக்கப் போய் ஹோப், ஹெட்மையரை இழக்க பவர் பிளேயிலேயே 39/2 என்று ஆனது.

பிறகு மே.இ.தீவுகளுக்கு ஒருநாளும் புரியாத குல்தீப் வந்தார், ஒரே ஓவரில் டேரன் பிராவோ, நிகோலச் பூரன் ஆகியோரை காலி செய்தார். பிராவோவுக்கு ஒரு பிரமாதமான ஸ்லிப் கேட்சையும் எடுத்தார் ரோஹித் சர்மா.  கெய்ரன் பொலார்டை ஷார்ட் பிட்ச் பந்தில் பும்ரா வீட்டுக்கு அனுப்பினார். 68/5 என்று ஆன மே.இ.தீவுகள் மெதுவே மடிந்தது.

20 ஓவர்களில் 124/9 என்று தோல்வி தழுவி தொடரை இழந்தது. ஆட்ட நாயகன் ரோஹித் சர்மா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x