Published : 13 Nov 2018 09:03 PM
Last Updated : 13 Nov 2018 09:03 PM

பவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ் மன வேதனையுடன் ஓய்வு அறிவிப்பு

பவுலிங் செய்யும் போது நுரையீரலில் ரத்தக் கசிவு ஏற்படாது என்று மருத்துவர்கள் உத்தரவாதம் அளிக்காததால் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜான் ஹேஸ்டிங்ஸ் மன வேதனையுடன் அனைத்துக் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஜான் ஹேஸ்டிங்ஸ் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில்தான் ஆடினார். 29 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடி 45 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு 271 ரன்களை ஒரு அரைசதத்துடன் எடுத்துள்ளார். 9 சர்வதேச டி20 போட்டிகளில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் இவரது சிறந்த பந்து வீச்சு 6/45 ஆகும்.

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏ.பி.டிவில்லியர்ஸ் விக்கெட்டை இவர் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 75 முதல் தர போட்டிகளில் 239 விக்கெட்டுகளையும் 93 அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோருடன் 2,231 ரன்களையும் எடுத்துள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 113 போட்டிகளில் 179 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

பிக்பாஷ் டி20 லீகில் மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக 7 சீசன்களில் ஆடியுள்ளார். 2017-18 சீசனில் கேப்டனாகவும் இருந்தார். வரும் தொடருக்கு அவர் சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு ஆடவிருந்தார்.

இந்நிலையில் பவுலிங் போடும்போது நுரையீரலில் ரத்தக் கசிவு பிரச்சினை இருந்தது, இதனால் இவர் ரத்த வாந்தி எடுக்கத் தொடங்கினார்.  இது எப்போதும் இல்லையென்றாலும், மீண்டும் பவுலிங் போடும்போது மைதானத்திலேயே ஏதாவது நடந்து விடுமோ என்ற பயத்தினால் அவர் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் ரத்தக் கசிவு ஏற்படாது என்பதற்கு மருத்துவர்கள் உத்தரவாதம் அளிக்கவில்லை என்றும் இது தனக்கு பெருத்த ஏமாற்றமளித்தது என்றும் ஆஸ்திரேலியா ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு தன் மனைவி ப்ரியான்னன் அவரது உறவினர்கள் உதவியுடன் கஃபே ஒன்றைத் திறக்கவுள்ளார். தனது இந்த நிலைமையை ஸ்போர்ட்டிவ் ஆக அவர் எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x