Last Updated : 29 Nov, 2018 03:41 PM

 

Published : 29 Nov 2018 03:41 PM
Last Updated : 29 Nov 2018 03:41 PM

பயிற்சிப்போட்டியில் 5 பேர் அரைசதம்: அனுபவம் இல்லாத பந்துவீச்சாளர்களிடம் ஆல்-அவுட் ஆன இந்திய அணி

ஆஸ்திரேலிய லெவன் அணிக்கு எதிராக இன்று நடந்த பயிற்சிப் போட்டியில் விராட் கோலி, பிரித்வி ஷா உள்ளிட்ட 5 இந்திய பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்த போதிலும், அனுபவம் இல்லாத பந்துவீச்சாளர்களிடம் 358 ரன்களில் ஆல் அவுட் ஆகியுள்ளது.

ஆஸ்திரேலிய லெவன் அணியில் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்குச் சிறப்பு வாய்ந்த பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லை.

ஆஸ்திரேலிய லெவன் அணியில் பந்துவீசிய 7 பந்துவீச்சாளர்களும் முதல்தரப்போட்டியிலும், ஏ லிஸ்ட் போட்டியிலும் முழுமையாக 10 போட்டிகளில்கூட விளையாடாத கத்துக்குட்டி வீரர்கள். இவர்களின் பந்துவீச்சை எதிர்கொண்டு 358 ரன்கள் ஒரே நாளில் இந்திய அணி அடிப்பது என்பது பெரிய விஷயம் அல்ல. ஆனால், இவர்களின் பந்துவீச்சில் இந்திய வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்ததைத்தான் நம்ப முடியவில்லை.

பயிற்சி ஆட்டம் என்பது எதிர்வரும் சோதனைகளுக்கு தன்னைத் தயார்படுத்திக்கொள்ளும் விதமாக இருக்க வேண்டும். ஆனால், ஆஸ்திரேலிய லெவன் அணி என்ற பெயரை மட்டும் பெரிதாக வைத்துக்கொண்டு சொத்தையான வீரர்களுடன் இந்திய அணி விளையாடியது இந்திய அணியின் திறமைக்கு உரைகல் அல்ல. அடுத்துவரும் டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி தன்னைத் தயார்படுத்திக்கொள்ளும் பயிற்சிப்போட்டியாகவும் அமையாது.

அனுபவமற்ற வீரர்களின் பந்துவீச்சில் அரைசதம் அடித்த வீரர்களைக்காட்டிலும், இந்த பந்துவீச்சில்கூட 3 ரன்களில் ஆட்டமிழந்த கே.எல்.ராகுல் டெஸ்ட் போட்டிக்கு தேறுவாரா என்பது சந்தேகத்தை வரவழைக்கிறது.

இங்கிலாந்து தொடரில் இருந்து சொதப்பிவரும் கே.எல். ராகுல் இந்த போட்டியிலும் தனது மோசமான பேட்டிங் ஃபார்மை கைவிடவில்லை.

ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, டெஸ்ட், ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. டி20 தொடர் 1-1 என்ற சமனில் முடிந்தநிலையில், டிசம்பர் 6-ம் தேதி முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

இந்த போட்டிக்கு தயாராகும் வகையில், இந்திய அணி, ஆஸ்திரேலிய லெவன் அணியுடன் 4 நாட்கள் பயிற்சிப்போட்டியில் விளையாட முடிவு செய்திருந்து. சிட்னியில் நகரில் நேற்று மழைபெய்ததையடுத்து, ஆட்டம் கைவிடப்பட்டது, இன்று 2-ம் நாள் ஆட்டம் நடந்தது.

டாஸ்வென்ற ஆஸ்திரேலிய லெவன் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. சிட்னியில் நேற்று மழை பெய்ததால், மைதானம் ஈரப்பதத்துடன் இருந்து. இதனால் எதிர்பார்த்த அளவுக்குப் பந்துகள் எழும்பவும் இல்லை, வேகமாகவும் வரவில்லை. ஆனால், அந்தப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், விக்கெட்டுகளை இந்திய வீரர்கள் பறிகொடுத்தனர்.

ராகுல், பிரித்விஷா ஆட்டத்தைத் தொடங்கினார்கள். ராகுல் 3 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த புஜாரா, பிரித்விஷாவுடன் சேரந்தார். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தனர்.

69 பந்துகளில் 11 பவுண்டரிகள் உள்பட 66 ரன்கள் சேர்த்து பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் கோலி களமிறங்கினார். இருவரும் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர். புஜாரா 54 ரன்களில் ஆட்டமிழந்தார். 87 பந்துகளைச் சந்தித்த கோலி 7 பவுண்டரிகள், ஒருசிக்ஸர் உள்பட 64 ரன்களில் வெளியேறினார்.

ரஹானே ஒரு பவுண்டரி உள்பட 53ரன்கள் சேர்த்து ரிட்டியர்ட் ஆகினார். விஹாரி 53 ரன்களிலும், ரோஹித் சர்மா 40 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். கடைநிலையில் களமிறங்கிய அஸ்வின், ஷமி, உமேஷ்யாதவ் ஆகியோர் டக் அவுட் ஆகினார்கள். ரிஷப் பந்த் ரன் ஏதும் சேர்க்காமல் களத்தில் இருந்தார்.

இந்திய அணி 92 ஓவர்களில் 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய லெவன் அணியில் ஹார்டி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தப் போட்டி பயிற்சிப்போட்டி என்பதால், குல்தீப் யாதவ், இசாந்த் சர்மா, பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் சேர்க்கப்படவில்லை.

அடுத்துக் களமிறங்கிய ஆஸ்திரேலிய லெவன் அணி விக்கெட் இழப்பின்றி, 4 ஓவர்களில் 24 ரன்கள் சேர்த்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x