Last Updated : 13 Nov, 2018 08:06 PM

 

Published : 13 Nov 2018 08:06 PM
Last Updated : 13 Nov 2018 08:06 PM

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாதான்: கங்குலி புகழாரம்

கடந்த 10 ஆண்டுகளில் நான் பார்த்தவரையில் இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாதான் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார்.

தற்போதுள்ள விக்கெட் கீப்பரில் மிகச்சிறந்தவர், விரைவாக ஸ்டெம்பிங் செய்யக்கூடியவர் எம்.எஸ். தோனியை அனைவரும் குறிப்பிடும்போது கங்குலி சஹாவை குறிப்பிட்டிருப்பது தோனியின் ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின் இந்திய டெஸ்ட் அணிக்கு பிரதான தேர்வாக விருத்திமான் சஹா இருந்துவந்தார். 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சஹா 1,164 ரன்கள் சேர்த்துள்ளார்.

இந்நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது தோள்பட்டை காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகிய சஹாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.தற்போது சிகிச்சை முடிந்து குணமடைந்து வருகிறார். டிசம்பர் மாதம் முதல்தரப் போட்டிகளில் விளையாடுவேன் என்றும் சஹா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடைசியாக இந்த ஆண்டு கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் விளையாடிய சஹா அதன்பின் காயம்காரணமாக இந்திய அணியில் இடம் பெறவில்லை. மேலும், அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அதன்பின் டெஸ்ட் போட்டியில் விளையாடப் போவதில்லை. அதன்பின் ஏறக்குறைய 6 மாதங்கள் வரை டெஸ்ட் போட்யில் இந்திய அணி பங்கேற்காது. ஆதலால், விருத்திமான் சஹாவின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்துவருகிறது.

இந்நிலையில், கொல்கத்தாவில் மூத்த பத்திரிகையாளர் கவுதம் பட்டாச்சார்யா “விக்கி” என்ற தலைப்பில் எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று கொல்கத்தாவில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

விருத்திமான் சஹா கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாகக் காயம் காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார். இந்திய அணியிலும் அவரால் இடம் பெறமுடியவில்லை. அவர் விரைவில் குணமடைந்து போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரை இந்தியாவில் கடந்த 5 முதல் 10 ஆண்டுகளில் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் உண்டு என்றால், அது விருத்திமான் சஹாதான்.

கிரிக்கெட் போட்டியில் காயம் ஏற்படுவது என்பது நம் கையில் இல்லை. விக்கெட்கீப்பர் டைவ் அடிக்க வேண்டியது இருக்கும் அப்போது காயம் ஏற்படுவது இயற்கைதான். அந்தக் காயத்தில் இருந்து விடுபடவும் குறிப்பிட்ட காலம் தேவைப்படும். விரைவாகக் காயத்தில் இருந்து மீண்டுவிட்டால், சிறப்பு. இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற விருத்திமான் சஹா பேசுகையில், முன்பைக் காட்டிலும் இப்போது எனது உடல்நிலை நன்றாக இருக்கிறது.டிசம்பர் நடுப்பகுதியில் நான் மீண்டும் கிரிக்கெட் விளையாடு வந்துவிடுவேன். அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். என் உடல்நிலை சீராகி விரைவில் ரஞ்சிப் போட்டியில் விளையாடுவேன். பயிற்சியில் ஈடுபடத்தொடங்கிவிட்டதால், விரைவில் அணியில் இடம் பெறுவேன் எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே இந்திய அணியில் தோனிக்கு அடுத்தாற்போல் 2-வது விக்கெட் கீப்பரை கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்திய அணி நிர்வாகம் இறங்கிவிட்டது. அதன் முயற்சியாகவே ஆஸ்திரேலியத் தொடருக்கு தினேஷ் கார்த்திக், ரிஷப்பந்த், பார்திவ் படேலைத் தேர்வு செய்து அழைத்துச் செல்கிறது. உலகக்கோப்பைப் போட்டி இந்தியஅணியில் தோனி, சஹா, தினேஷ் கார்த்திக், ரிஷப்பந்த், பார்திவ் படேல் இதில் யாரை இந்திய அணி தேர்வு செய்யப்போகிறது என்பது தெரியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x