

நியூஸிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ராஸ் டெய்லர், மொகமது ஹபீஸ், பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமட் ஆகியோர் ஈடுபட்ட ஒரு சர்ச்சை நிகழ்வு நடந்தது பரபரப்பாகியுள்ளது.
அபுதாபியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ராஸ் டெய்லர் (80) பேட் செய்த போது மொகமது ஹபீஸ் பவுலிங் செய்வது பந்தை விட்டு எறிவது போல் உள்ளது என்பதைக் குறிக்கும் விதமாக முழங்கையை மடக்கிக் காட்டினார் ராஸ் டெய்லர்.
இது நடுவரை நோக்கிச் செய்தாரா அல்லது எதிர்முனையில் இருந்த சக வீரர் டாம் லேதமை நோக்கிச் செய்தாரா என்பது தெரியவில்லை. ஆனால் இதனையடுத்து சர்பராஸ் நவாஸ் கடும் கோபடமைந்து நடுவர்களிடம் நீண்ட நேரம் வாதிட்டார்.
ஆனால் இத்தோடு முடியாமல் ஹபீஸ் தொடர்ந்து வீசினார், சர்பராஸ் அகமெடும் ராஸ் டெய்லருடன் வாக்குவாதம் புரிந்தபடியே இருந்தார். கடைசியில் கள நடுவர்கள் ஷோசப் ரஸா மற்றும் ஜொயெல் வில்சன் ஆகியோர் ராஸ் டெய்லரிடம் பேச வேண்டியதானது.
ஏற்கெனவே மொகமது ஹபீஸ் ஆக்ஷன் சர்ச்சையாகி அவர் பந்து வீச பலமுறைத் தடை விதிக்கப்பட்டிருந்தது, ஆனால் அவர் தன் ஆக்ஷனை, முழங்கையை மடக்குவதை அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள் வருமாறு திருத்திக் கொண்டு விட்டார் என்ற அடிப்படையில் மீண்டும் பவுலிங் செய்ய அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஆட்டம் முடிந்த பிறகு பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமெட் ஆவேசமாகக் கூறியதாவது:
டெய்லர் செய்தது சரியல்ல. அது அவர் வேலையல்ல. மிகவும் இழிவான செயல். அவர் வேலை பேட்டிங் செய்வது மட்டுமே. அவரது செயல்பாடு விளையாட்டுணர்வுக்குள் இல்லை என்பதை நடுவரிடம் நான் தெரிவித்தேன்.
ராஸ் ஒரு தொழில்பூர்வ கிரிக்கெட் வீரர், அவர் இப்படி செய்வதாகாது. 2-3 முறை ஹபீஸ் ஆக்ஷனை அவர் மிமிக் செய்தார். இது நடுவர்களின் வேலை. டெய்லர் வேண்டுமென்றே இதனைச் செய்துள்ளார்.
என்று டெய்லர் மீது பாய்ந்துள்ளார் சர்பராஸ்.