Published : 09 Nov 2018 05:43 PM
Last Updated : 09 Nov 2018 05:43 PM

‘விராட் கோலியின் பேச்சு ஏற்க முடியாதது’: ஆகாஷ் சோப்ரா

இந்திய வீரர்களைப் பிடிக்காத ரசிகர்கள் நாட்டை வசிக்கத் தேவையில்லை என்ற விராட் கோலியின் பேச்சு ஏற்க முடியாதது, அது குறித்து கோலி இனி பெருமைப்பட முடியாது என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா வேதனைத் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி தனது பிறந்த நாளை முன்னிட்டு புதிய ஆப்ஸ் வெளியிட்டு இருந்தார். அதில் ஒரு ரசிகர் பதிவிட்ட கருத்தில், ''விராட் கோலி மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கையும், நல்ல எண்ணமும் ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து அவரிடம் ஏதும் சிறப்பான பேட்டிங் திறமை இருப்பதாகத் தெரியவில்லை. நான் இந்திய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதை ரசிப்பதைக் காட்டிலும், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பேட்ஸ் செய்வதை ரசித்துப் பார்ப்பேன்'' என்று சாடியிருந்தார்.

அவருக்குப் பதிலடி கொடுத்து வீடியோ வெளியிட்ட விராட், ''இந்திய பேட்ஸ்மேன்களை விரும்பாமல், வெளிநாட்டு வீரர்களை விரும்பும் ரசிகர்கள் இந்தியாவில் வசிக்கத் தேவையில்லை'' என்று கருத்து தெரிவித்தார். இந்தக் கருத்து ரசிகர்கள், நெட்டிசன்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், கோபத்தையும் கிளப்பி மிகக்காட்டமான கருத்துகளைப் பதிவிட்டு இருந்தனர்.

தனது பேச்சுக்கு நாளுக்கு நாள் கண்டனம் வலுத்து வருவதை அறிந்த விராட் கோலி ட்விட்டரில் இன்று மழுப்பலாகக் கருத்து பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விராட் கோலியின் பேச்சுக்கு வேதனையும், கண்டனமும் தெரிவித்துள்ளார். அவர் தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ‘‘விராட் கோலி இப்படித்தான் சிந்திப்பாரா அல்லது விராட் கோலி இப்படித்தான் இருப்பாரா என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. கடந்த 18 முதல் 24 மாதங்களாக விராட் கோலியிடம் ஏராளமான முதிர்ச்சியை நாங்கள் பார்த்து வருகிறோம்.

அவரின் பேச்சிலும், பொதுவெளியில் அவரின் செயல்பாட்டிலும், போட்டிக்குப் பின் அவர் அளிக்கும் பேட்டியிலும் முதிர்ச்சி காணப்பட்டது. வெற்றிக்குக் கூட தான் ஒரு காரணம் என்பதைக் கூட அவர் எடுத்துக்கொள்ள விரும்பாமல் இருக்கிறார். அவர் மிகவும் பணிவுடன், அமைதியாகவும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆனால், விராட் கோலி வீடியோவில் சமீபத்தில் பேசி இருந்ததைப் பார்த்து எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் சொன்ன கருத்து எனக்கு வேதனையாக இருந்தது. ஏற்கமுடியாததாக இருந்தது. நாம் என்ன நினைக்கிறோமோ அதைக் கூற கருத்துச்சுதந்திரம் அனுமதிக்கிறது. அதேசமயம், இப்போதுள்ள நிலையில் சமூக ஊடகங்கள் மிகவும் மோசமாக போய்க்கொண்டிருக்கிறது. கோலி தான் பேசியதை நினைத்துப் பெருமைப்பட்டுக்கொள்ளமாட்டார்’’ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x