Published : 10 Nov 2018 20:58 pm

Updated : 10 Nov 2018 20:58 pm

 

Published : 10 Nov 2018 08:58 PM
Last Updated : 10 Nov 2018 08:58 PM

சென்னையில் தோனி இல்லாத டி20 போட்டி: வாஷிங்டன் சுந்தர், ஸ்ரேயாஸ் அய்யர், நதீமுக்கு வாய்ப்பு: நாளை மே.இ.தீவுகளுடன் மோதல்

20

சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் அரங்கில் நாளை நடைபெறும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்திய அணியில் இளம் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், ஸ்ரேயாஸ் அய்யர், அறிமுக வீரர் ஷாபஸ் நதீம் ஆகியோர் களமிறங்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை கிரிக்கெட் ரசிகர்களின் ஆத்மார்த்த ஹீரோ, தல எம்.எஸ்.தோனி இல்லாமல் நடக்கும் டி20 போட்டியாகும். உண்மையில், தோனி இல்லாத டி20 போட்டியைக் காண்பது ரசிகர்களுக்குப் பெருத்த ஏமாற்றமாக அமையும். இந்த டி20 தொடர் மட்டுமல்லாது, ஆஸி. தொடருக்கும் தோனி தேர்வு செய்யப்படவில்லை என்பது ரசிகர்களுக்கு வருத்தமான செய்தியாகும்.

3 போட்டிகள் கொண்ட டி20 போட்டித் தொடரில் ஏற்கெனவே 2 போட்டிகளை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்று தொடரை 2-0 எனக் கைப்பற்றிவிட்டது. ஆதலால், இந்தப் போட்டி ஒரு சம்பிரதாயத்துக்காகவே இருக்கும் என்றாலும், அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் இளம் வீரர்கள் திறமையை நிரூபிக்கக் களமாக பயன்படும்.

குறிப்பாக ஸ்ரேயாஸ் அய்யர், மண்ணின் மைந்தன் வாஷிங்டன் சுந்தர், அறிமுக சுழற்பந்துவீச்சாளர் ஷாபாஸ் நதீம் ஆகியோர் ஆஸ்திரேலியா செல்லும் முன் திறமையை வெளிக்காட்ட வாய்ப்பாக அமையும்.

ஆஸ்திரேலியத் தொடரைக் காரணம் காட்டி வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, உமேஷ் யாதவ், சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுவிட்டது. இவர்களுக்குப் பதிலாக சித்தார்த் கவுல் சேர்க்கப்பட்டுள்ளார்.

சேப்பாக்கம் மைதானம் மெதுவான ஆடுகளம், பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரியாகும். இங்கு முதலில் பேட் செய்யும் அணி அடிக்கும் எத்தகைய ஸ்கோரையும் 2-வது பேட் செய்யும் அணி சேஸிங் செய்ய முடியும். ஏற்கெனவே ரோஹித் சர்மா அசுர பார்மில் இருப்பதால், நாளை ரசிகர்களுக்கு சிக்ஸர், பவுண்டரிகள் விருந்துகள் நிச்சயம் இருக்கும்.

கடந்த இரு போட்டிகளிலும் ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக் தவிர முக்கிய பேட்ஸ்மேன்களான ஷிகர் தவண், கே.எல். ராகுல், ரிஷப் பந்த் ஆகியோர் சரிவர பேட்டிங் திறனை வெளிப்படுத்தவில்லை. நாளைய போட்டியில் அவர்களின் விளாசல் இருந்தால் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

உள்ளூர் நாயகன் தினேஷ் கார்த்திக் நிடாஹாஸ் கோப்பையில் இருந்து டி20 நட்சத்திர வீரராக மாறிவிட்டார். முதல் போட்டியில் இந்திய அணி சேஸிங் செய்ய திணறியபோதிலும் நிலைத்து ஆடி வெற்றிக்கு தினேஷ் கார்த்திக் உறுதுணையாக அமைந்தார். சொந்த மண்ணில், உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் தினேஷ் கார்த்திக் விளையாடுவது அவருக்குக் கூடுதல் உற்சாகத்தை அளிக்கும்.

வேகப் பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், கலீல் அகமதுவுக்கு வாய்ப்பும், சுழற்பந்துவீச்சில் யஜுவேந்திர சாஹலுக்கு துணையாக குர்னல் பாண்டியா அல்லது, நதீம், வாஷிங்டன் சுந்தர் களமிறங்குவாரா என்பது இறுதிநேரத்தில் தெரியும்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியைப் பொறுத்தவரை வழக்கமான அதிரடி தொடக்க ஆட்டக்காரர்கள் கெயில், லீவிஸ் இல்லாதது பெரும் பின்னடைவாகும். கேப்டன் பிராத்வெய்ட் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி கடைசிப் போட்டியை வெற்றியுடன் முடிக்க கடும் பிரயத்தனம் செய்யும்.

ஆனால், கடந்த இரு போட்டிகளிலும் கெய்ரன் பொலார்ட், டேரன் பிராவோ, தினேஷ் ராம்தின் ஆகியோர் எதிர்பார்த்த அளவுக்குச் சிறப்பாக பேட் செய்யவில்லை. ஒருநாள் போட்டியில் கலக்கிய ஹெட்மயரும் சோபிக்கவில்லை.

பந்துவீச்சில் ஆஸ்னே தாமஸ் சிறப்பாகப் பந்துவீசி நெருக்கடி தருகிறார். இவருக்கு மற்ற வீரர்கள் ஆதரவு அளித்தால் இந்திய வீரர்களுக்குத் தலைவலியாக இருப்பார்கள்.

கடந்த 2016, ஐசிசி டி20 உலகக்கோப்பையில் கொல்கத்தாவில் நடந்த இறுதி ஆட்டத்தில் பென்ஸ்டோக்ஸ் பந்துவீச்சை பொளந்துகட்டிய பிராத்வெய்ட் ஆட்டம் இன்னும் யாருக்கும் மறந்திருக்காது. அதுபோன்ற ஆட்டத்தை பிராத்வெய்ட் வெளிப்படுத்தினால், இந்திய அணி பாடு திண்டாட்டமாகும். ஆனால், சென்னை ஆடுகளம் பேட்ஸ்மேனுக்கு சொர்க்கபுரி என்பதால், ரசிகர்களுக்குத் தீபாவளி முடிந்த பின்பும், சிக்ஸர், பவுண்டரி வானவேடிக்கை நிகழும் என்பதில் சந்தேகமில்லை. போட்டி நாளை இரவு 7 மணிக்கு தொடங்கும்.

இந்திய அணி விவரம்:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவண், கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், மணிஷ் பாண்டே,ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த், குர்னல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், யஜுவேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, ஷாபாஸ் நதீம், சித்தார்த் கவுல்.

மே.இ.தீவுகள் அணி விவரம்

கார்லோஸ் பிராத்வெய்ட் (கேப்டன்), டேரன் பிராவோ, ஷிம்ரன் ஹெட்மயர், ஷாய் ஹோப், மெக்காய், கீமோ பால், காரே பியரே, கெய்ரன் பொலார்ட், நிகோலஸ் பூரன், ரோவ்மன் பாவெல், தினேஷ் ராம்தின், ரூதர்போர்ட், தாமஸ்

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author