Published : 10 Nov 2018 04:00 PM
Last Updated : 10 Nov 2018 04:00 PM

‘விடைபெற்றார் முனாப் படேல்’: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தார்

இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் முனாப் படேல் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார்.

2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்று முக்கிய வெற்றிகளுக்குக் காரணமாக இருந்தவர் முனாப் படேல் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத் மாநிலம், இக்கர் நகரைச் சேர்ந்த முனாப் படேல், கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி மொஹாலியில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அதன்பின் இந்திய அணிக்காக டெஸ்ட், மற்றும் ஒருநாள் போட்டிகளில் 5 ஆண்டுகள் வரை விளையாடினார். கடைசியாக 2011-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி கார்டிப்பில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிக்குப் பின் முனாப் படேல் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.

அதன்பின் இந்திய அணியில் விளையாடாமல் மாநில அணியிலும், முதல் தரப்போட்டிகளில் மட்டும் விளையாடினார். ஐபிஎல் தொடங்கப்பட்ட பின், குஜராத் லயன்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளில் இடம் பெற்று விளையாடினார். ஆனால், கடந்த ஆண்டு ஏலத்தில் விலை போகவில்லை. இந்நிலையில், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக முனாப் படேல் இன்று அறிவித்துள்ளார்.

இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள முனாப் படேல், 35 விக்கெட்டுகளையும், 70 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 74 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

69 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள முனாப் படேல் 231 விக்கெட்டுகளையும், 140 ஏ கிளாஸ் போட்டிகளில் விளையாடி 173 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். மேலும், டி20 போட்டிகளில் 97 ஆட்டங்களில் விளையாடி 101 விக்கெட்டுகளை முனாப் வீழ்த்தியுள்ளார்.

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து வேகப் பந்துவீச்சாளர் முனாப் படேல் ஒரு ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து கவலைப்படவில்லை. நான் விளையாடிய அனைத்து கிரிக்கெட் வீரர்களும் ஓய்வு பெற்றுவிட்டார்கள். தோனியுடன் மட்டும்  ஓய்வு பெறாமல் இருக்கிறார். ஒவ்வொருவருக்கும் ஓய்வு பெறும் நேரம் உண்டு எனக்கு வந்துவிட்டது. உடற்தகுதி என்பது ஒருகாரணமில்லை. என்னுடைய மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு இளம் வீரர்கள் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு வழிவிடுகிறேன். 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை வெற்றி பெற்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்ததை நினைக்கையில் பெருமையாக இருக்கிறது.

கிரிக்கெட் மட்டும் இல்லையென்றால் என் வாழ்க்கை திசை மாறிப் போயிருக்கும். 35 ரூபாய் ஊதியத்துக்கு ஆப்பிரிக்காவில் ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருப்பேன். பெரும்பாலான குஜராத் மக்கள் அங்குதான் இருக்கிறார்கள். டைல்ஸ் கற்களைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்திருப்பேன். இத்தனை ஆண்டுகாலம் கிரிக்கெட் விளையாடுவேன் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை'' என முனாப் படேல் தெரிவித்தார்.

கிரிக்கெட்டில் இருந்து முனாப் படேல் ஓய்வு பெற்றாலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் விரைவில் தொடங்க இருக்கும் டி10 லீக் போட்டியில் முனாப் படேல் விளையாட உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x