Last Updated : 08 Oct, 2018 02:42 PM

 

Published : 08 Oct 2018 02:42 PM
Last Updated : 08 Oct 2018 02:42 PM

இந்தியா டி20 போட்டி: மே.இ.தீவுகள் அணியில் பிராவோ, பொலார்ட்; கெயில் மறுப்பு;3 புதிய வீரர்களுக்கு வாய்ப்பு

இந்திய அணிக்கு எதிரான டி20, ஒரு நாள் தொடரில் பங்கேற்கும் மேற்கிந்தியத்தீவுகள் அணியில் இடம் பெற கிறிஸ் கெயில் மறுத்துவிட்டார். டேரன் பிராவோ, கிரண் பொலார்ட் ஆகியோர் டி20 அணியில் இடம் பெற்றுள்ளனர், மேலும் 3 புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மேற்கிந்தியத்தீவுகள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2-வது டெஸ்ட் போட்டி முடிந்த நிலையில், ஒரு நாள் மற்றும் டி20 தொடர் நடைபெற உள்ளது.

இம்மாதம் 21-ம் தேதி கவுகாத்தியில் முதலாவது டி20 போட்டி நடைபெற உள்ளது. இந்த டி20 அணியிலும், ஒருநாள் போட்டியிலும் இடம் பெற உள்ள வீரர்கள் குறித்த பட்டியிலை மேற்கிந்தியத்தீவுகள் அணி வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் மற்றும் டி20 தொடர் ஆகிய இரண்டிலுமே கிறிஸ் கெயில் இடம் பெற மறுத்துவிட்டார்.

இது குறித்து மே.இ.தீவுகள் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் கோர்ட்னி பிரவுன் கூறுகையில், “ கெயில் தனக்கு சொந்த வேலைகள் அதிகமாக இருப்பதால், தன்னால் இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாட முடியாது என்றும், அடுத்து நடக்கும் வங்கதேசத்துக்கு எதிரான தொடரிலும் தன்னால் விளையாட முடியாது என கெயில் தெரிவித்துள்ளார்.இங்கிலாந்து தொடரிலும், உலகக்கோப்பையிலும் தான் விளையாட விருப்பம் இருப்பதாக தெரிவித்துவிட்டார்.

அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ள 50 ஓவர்கள் உலகக் கோப்பைப் போட்டி, 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இளம் வீரர்களான சந்தர்பால் ஹேம்ராஜ், ஆல்ரவுண்டர் பேபியன் ஆலன், வேகப்பந்துவீச்சாளர் ஓஸ்னே தாமஸ் ஆகியோர் இந்தத் தொடரில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்தியாவில் ஐபிஎல் தொடரில் விளையாடி மிகுந்த அனுபவம் கொண்ட கிரண் பொலார்ட், டேரன் பிராவோ, ஆன்ட்ரூ ரஸல் ஆகியோர் டி20 தொடருக்குச் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் சுனில் நரைன், டிவைன் பிராவோவுக்கு இடம் கிடைக்கவில்லை என பிரவுன் தெரிவித்தார்.

ஒருநாள் போட்டித் தொடருக்கு ஜேஸன் ஹோல்டர் கேப்டனாகவும், டி20 தொடருக்கு பிராத்வெய்ட் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒருநாள் போட்டிக்கான அணி வீரர்கள் விவரம்:

ஜேஸன் ஹோல்டர்(கேப்டன்), பேபியன் ஆலம், சுனில் அம்பிரிஸ், தேவேந்திர பிஷூ,சந்தர்பால் ஹேம்ராஜ், ஷிம்ரன் ஷிட்மியர், ஷாய் ஹோப், அல்ஜாரி ஜோசப், எவின் லீவிஸ், ஆஷ்லே நர்ஸ், கீமோ பால், ரோவ்மன் பாவெல், கீமர் ரோச், மார்லன் சாமுவேல்ஸ், ஓஸ்னே தாமஸ்

டி20 அணி வீரர்கள் விவரம்:

கார்லோஸ் பிராத்வெய்ட்(கேப்டன்), பேபியன் ஆலன், டேரன் பிராவோ, ஷிம்ரன் ஹெட்மியர், எவின் லீவிஸ், ஓபெட் மெக்காய், ஆஷ்லே நர்ஸ், கீமோ பால், காரே பியரே, கிரண் பொலார்ட், ரோவ்மென் பாவெல், தினேஷ் ராம்தின், ஆன்ட்ரூ ரஷல், ஷெர்பேஃன் ரூதர்போர்ட், ஓஸ்னே தாமஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x