Published : 02 Aug 2014 03:12 PM
Last Updated : 02 Aug 2014 03:12 PM

ஆஸ்திரேலியா ஏ அணியை வீழ்த்தி இந்தியா ஏ சாம்பியன்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 4 அணிகள் பங்கேற்ற ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா ஏ அணி, ஆஸ்திரேலியா ஏ அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.

இந்தியா ஏ, தென் ஆப்பிரிக்கா ஏ, ஆஸ்திரேலியா ஏ, மற்றும் ஆஸ்திரேலிய திறன் வளர்ச்சி மைய அணி ஆகியவை இந்த நாற்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்றன. இதில் உத்தப்பா தலைமை இந்தியா ஏ அணியும், கேமரூன் ஒயிட் தலைமை ஆஸ்திரேலியா ஏ அணியும் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றன.

இன்று நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா ஏ அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா ஏ அணி ஒரு சமயத்தில் 51/3 என்று சரியும் நிலையில் இருந்தது, ஆனால் கடைசியில் 48.4 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 275 ரன்களை எடுத்து டைட்டில் வென்றது.

டாஸ் வென்ற கேமரூன் ஒயிட் பேட் செய்ய முடிவெடுத்ததோடு, துவக்க வீரராகக் களமிறங்கி 10 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 150 பந்துகளில் 137 ரன்களை விளாசினார்.

பில் ஹியூஸ் (51) மற்றும் ஒயிட் இணைந்து துவக்க விக்கெட்டுக்காக 26.5 ஓவரில் 146 ரன்கள் எடுத்தனர். பிலிப் ஹியூஸ், தவால் குல்கர்னி பந்தில் ராயுடுவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தூலனுடன் இணைந்து ஒயிட் ஸ்கோ்ரை 220 ரன்களுக்கு உயர்த்தியபோது தூலன், ஒயிட், ஹெண்ட்ரிக்ஸ், மார்ஷ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆஸி. ஏ அணி 46.4 ஓவர்களில் 237/5 என்று ஆனது. பிறகு பி.ஜே.கட்டிங் இறங்கி 35 ரன்களை விளாசினார். ஆஸி.ஏ 274 ரன்கள் எடுத்தது.

275 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்தியா ஏ அணியில் மீண்டும் ராபின் உத்தப்பா சோபிக்கவில்லை, 12 ரன்களில் அவுட் ஆனார். முன்னதாக 8 ரன்களில் மனன் வோரா ரன் அவுட் ஆனார். ஃபார்மில் உள்ள ராயுடு 7 ரன்களில் கட்டிங் பந்தில் எல்.பி.தீர்ப்பளிக்கப்பட்டார். ஆனால் அந்தத் தீர்ப்பில் ராயுடுவுக்கு திருப்தி ஏற்படவில்லை.

10.2 ஓவர்களில் இந்தியா ஏ 51/3 என்று சரியும் நிலை ஏற்பட்டது. அப்போது மனோஜ் திவாரி, அதிரடி வீரர் கேதர் ஜாதவ் இணைந்து 82 ரன்களை 16 ஒவர்களில் சேர்த்து நிலைப்படுத்தினர். மனோஜ் திவாரி 3 பவுண்டரிகளுடன் 75 பந்துகளில் அரைசதம் கண்டார். ஆனால் இவரும் கட்டிங் பந்தில் ஆட்டமிழக்க இந்தியா 133/4 என்று ஆனது.

தொடர்ந்து ஆஸ்திரேலியா ஏ அணியின் ஃபீல்டிங் அபாரமாக அமைய சஞ்சு சாம்சன் 5 ரன்னில் பாய்ஸிடம் ரன் அவுட் ஆனார். கேதர் ஜாதவ் அதிரடி முறையில் ஆடிவந்தார். அவர் மார்ஷ், பாய்ஸ் போன்ற வீச்சாளர்களுக்கு எதிராக விரைவு ரன்களைக் குவித்தார். 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் வர் 73 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து கட்டிங் பந்தில் அவுட் ஆனார். இந்தியா அப்போதும் 36.1 ஓவரில் 182/6 என்ற நிலையில் இருந்தது. டெய்ல் எண்டர்களே மீதமுள்ளனர்.

ஆனால் அதன் பிறகு சற்றும் எதிர்பாராத வகையில், ரிஷி தவான், அக்‌ஷர் படேல் இணைந்து 14 ஓவர்களில் 93 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்ட நிலையில் 12 ஓவர்களிலேயே இலக்கை எட்டினர்.

ரிஷி தவான் 55 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க, அக்‌ஷர் படேல் 38 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 45 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார், இந்தியா ஏ 48.4 ஓவர்களில் 275 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x