

மே.இ.தீவுகள், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்களில் தோனியை நீக்கியதன் மூலம் 2019 உலகக்கோப்பைக்கு இந்திய அணித்தேர்வுக்குழு நிச்சயமான ஒரு திட்டத்துடன் இருப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும், தோனி போன்ற அனுபவமிக்க ஒரு கேப்டனின் ஆலோசனைகள் விராட் கோலிக்கு 2019 உலகக்கோப்பையில் தேவைப்படும், ஆகவே தோனி 2019 உலகக்கோப்பைக்கு அவசியம் தேவை ஆகவேதான் அவருக்கு டி20 பணியிலிருந்து விடுதலை அளிக்கப்பட்டுள்ளதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தோனி கடந்த காலங்களில் தனக்குத் தானே நிர்ணயித்துக் கொண்ட உயர் தர நிலையில் தற்போது இல்லை, அவரது பேட்டிங் கடும் பின்னடைவு கண்டாலும் அதில் முன்னேற்றத்துக்கு வாய்ப்பு உள்ளதோடு அவரது ஆலோசனைகள் களத்தில் கோலிக்கு மிகவும் உதவுபவை, எனவே கோலிக்கு தோனி தேவை என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
“எம்.எஸ்.தோனி 2019 உலகக்கோப்பைக்குக் கட்டாயம் தேவை. விராட்டுக்கு தோனி தேவை. இதில் எந்த சந்தேகமும் இல்லை. 50 ஒவர் கிரிக்கெட்டில் செட்டில் ஆகி ஆடுவதற்கு கால அவகாசம் இருப்பதால் தோனி இங்குதான் முக்கியமானவராகத் திகழ்கிறார்.
அவர் எப்போதும் களவியூகத்தில் தேவையான சிறிய சிறிய மாற்றங்களைச் செய்கிறார், பவுலர்களிடம் இந்தியில் பேசி எங்கு போட வேண்டும், என்று ஆலோசனை வழங்குகிறார், இது விராட் கோலிக்கு மிகப்பெரிய பிளஸ்.
இதைக்கூறும் போதே, ரோஹித் சர்மா ஒரு சிறந்த கேப்டனாக உருவெடுத்து வருகிறார் என்பதையும் கூற வேண்டும். ஒரு சிந்திப்பவராக, திட்டமிடுபவராக ரோஹித் சர்மா நிறைய முன்னேறியுள்ளார். அவர் பிரில்லியண்ட். ரோஹித், ரஹானேவும் கூட கேப்டன்சி திறமைகள் உடையவர். ஆகவே கோலி சாய்ந்து கொள்ள மேலும் இரு தோள்கள் உள்ளன.
ஆகவே, தோனியை டி20 கிரிக்கெட் பணிகளிலிருந்து விடுவித்தது 2019 உலகக்கோப்பை கிரிக்கெட்டை மனதில் கொண்டே என்று நான் கருதுகிறேன்” என்றார் சுனில் கவாஸ்கர்.