Published : 25 Oct 2018 07:51 AM
Last Updated : 25 Oct 2018 07:51 AM

கோலியின் பிரமாத 157 ரன்களினால் இந்தியா கிரேட் எஸ்கேப் ‘டை’: இந்திய அணியின் ஈகோவை உடைத்த ஷேய் ஹோப், ஹெட்மையர் ஆட்டம்

விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலியின் 157 ரன்கள் சொந்தச் சாதனையாக மட்டும் மிளிர, ஹெட்மையரின் பரபரப்பான அதிரடி, ஷேய் ஹோப்பின் அழகான சதம் ஆகியவற்றினால் மே.இ.தீவுகள் அணி 321 ரன்கள் இலக்கை எடுத்து பரபரப்பாக டை செய்தது.

கோலி 157 ரன்களை எடுத்து கடைசி 10 ஓவர்களில் சுமார் 100 ரன்களை எடுத்திருக்காவிட்டால் இந்திய அணி மண்ணைக் கவ்வியிருக்கும். இதுக்கு மேலும் தோனியை அணியில் வைத்திருந்தால் அது கிரிக்கெட் நோக்கங்களுக்காக அல்ல வணிக நோக்கங்களுக்காக என்பது திண்ணம்.

 

சதம் அடித்தப் பிறகு ஷேய் ஹோப், உமேஷ் யாதவ்வின் புல்டாஸ்களை பீல்டர் கையில் அடித்து அடித்து வீண் செய்ததோடு, சாஹலை வெளுக்கத் தவறி, டாட்பால்களாக விட்டதோடு ஜேசன் ஹோல்டரையும் ஹோப் ரன் அவுட் செய்தார். ஷேய் ஹோப் கடைசியில் பதற்றமடையாமல் இருந்திருந்தால் மே.இ.தீவுகளுக்கு ஒருநாள் போட்டியில் பெரிய விரட்டல் வெற்றியாகியிருந்திருக்கும். ஆனாலும் தோற்றிருந்தால் இன்னும் சோர்வு ஏற்பட்டிருக்கும் அந்த அணிக்கு, ஆகவே தோல்விக்கு ட்ரா பரவாயில்லை என்றே அவர்கள் கருதுவார்கள்.

சாஹல் பந்துகள் திரும்பாத பிட்சில் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசுவதற்குப் பதிலாக லெக் ஸ்டம்ப் லைனில் வீசி சாத்துமுறை வாங்கினார்.

ரோவன் போவெல் ஆட்டமிழந்த போது 38வது ஓவரில் மே.இ.தீவுகள் வெற்றிக்குத் தேவை 69 ரன்கள்தான், பந்துக்கு ஒரு ரன் என்ற விகிதம் கூட இல்லை. ஆனால் இந்தியர்களுக்கு அனுகூலமற்ற சூழலில் பனிப்பொழிவில் பந்துகள் வழுக்க ஏகப்பட்ட புல்டாஸ்களில் ரன் எடுக்காமல் விட்டனர். எப்போதும் ஈரப்பந்தில் தேர்ட்மேனை முன்னுக்கு வரை வைத்து ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசுவதுதான் சிறந்தது, அப்படித்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசுவார்கள், ஆனால் உமேஷ் யாதவ், ஷமி ஈரப்பந்தில் யார்க்கர்களை வீச முயன்றனர். அது புல்டாஸ்களாக மாற அதை ஷேய் ஹோப் பீல்டர் கையில் கையில் அடித்து சொதப்பினார். கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவை.

அப்போது ஷேய் ஹோப் சிங்கிள் எடுக்க ஆஷ்லி நர்சுக்கு ரிவர்ஸ் ஸ்விங் யார்க்கர் புல்டாஸாக மாற லெக் திசையில் 4 லெக்பைகள் சென்றன. அடுத்த பந்தை டீப் மிட்விக்கெட்டில் தட்டி விட்டு 2 ரன்கள் எடுத்தார் நர்ஸ். அடுத்த பந்தை ஆஷ்லி நர்ஸ் மிக அருமையாக ஸ்கூப் ஆடினார், அந்த நேரத்தில் அதுதான் சிறந்த ஷாட் ஆனால் பந்து டீப் தேர்ட்மேனில் ராயுடுவின் கையில் போய் உட்கார்ந்தது. 2 பந்துகளில் 7 ரன்கள் என்ற நிலையில் முனை மாறிய ஹோப் தாழ்வான புல்டாஸை மிட்விக்கெட்டில் 2 ரன்களுக்குத் தட்டி விட்டார். கடைசி பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஷார்ட் பிட்ச் பந்து வீசுவதற்குப் பதிலாக உமேஷ் ஃபுல் பந்தை வீச பாயிண்டில் ஹோப் அடித்து ஆட அங்கு ராயுடுவைக் கடந்து பந்து பவுண்டரிக்குப் பறக்க ஆட்டம் டை ஆனது. கோலி நிம்மதிப் பெருமூச்சு விட்டார், காரணம், ஆட்டம் தோற்காமல் டை ஆனதே. கடைசியில் விராட் கோலி அடித்திருக்காவிட்டால் இந்திய அணி தோற்றிருக்கும். 17 பந்துகளில் 48 ரன்களை கடைசியில் விளாசினார் கோலி.

ஹெட்மையரின் திகைப்பூட்டிய அதிரடி, ஷேய் ஹோப்பின் அழகான சதம்:

மே.இ.தீவுகள் அணி கெய்ரன் போவெல், சந்தர்பால் ஹேம்ராஜுடன் 6 ஓவர்கள் 36 ரன்கள் என்ற சுமாரான தொடக்கம் கண்டது மொகமது ஷமி ஓவருக்கு ஒரு பவுண்டரி கொடுத்தார்.

ஆனால் உமேஷ் யாதவ்வை ஹேம்ராஜ், போவெல் தலா ஒரு பவுண்டரியையும் பிறகு 6வது ஓவரில் உமேஷை ஹேம்ராஜ் 2 பவுண்டரிகளையும் விளாசினார். அப்போது 18 ரன்கள் எடுத்த போவெல், ஷமி பந்தை லேசாக மேலேறி வந்தார். ஷமி ஷார்ட் பிட்ச் ஆக்க, இடது கை வீரர் போவெலுக்கு புல் அடிக்க போதிய இடமில்லை. அப்படியும் அடித்தார் டீப் மிட்விக்கெட்டில் பந்த்திடம் கேட்ச் ஆனது. ஷேய் ஹோப் இறங்கினார், மிக அருமையான பிளிக்கில் 2 ரன்களையும் பிறகு ஒரு அபாரமான ஆஃப் ட்ரைவி பவுண்டரியையும் அடிக்க, அடுத்த ஓவரில் ஹேம்ராஜ், மீண்டும் உமேஷ் யாதவ்வை பாயிண்டில் மற்றும் நேராக இரண்டு பவுண்டரிகளை அடித்து உமேஷ் யாதவ்வை மட்டுமே 5 பவுண்டரிகள் விளாசியிருந்தார். குல்தீப் வந்தவுடன் ஒரு எட்ஜ் பவுண்டரி அடித்து 24 பந்துகளில் 32 எடுத்திருந்த ஹேம்ராஜ், குல்தீப்பின் கூக்ளியில் பவுல்டு ஆனார். சாமுவேல்ஸ் இறங்கி குல்தீப்பை அதே ஓவரில் பிரமாதமான கவர் பவுண்டரிகளை அடித்தார். 10 ஓவர்களில் 72/2 என்று மே.இ.தீவுகள் நல்ல நிலையில் சென்று கொண்டிருந்தது.

சாமுவேல்ஸ் இன்னொரு பவுண்டரியை குல்தீப் யாதவ் பந்தில் அடித்து 13 ரன்களி அபாயகரமாகத் திகழ்ந்த போது குல்தீப்பின் மீண்டுமொரு அற்புத கூக்ளியில் பவுல்டு ஆனார். அது பவுல்டுதானா என்பதை அறிய 3வது நடுவரிடம் செல்ல வேண்டி வந்தது. முதன் முதலாக 3வது நடுவர் தீர்ப்பில் பவுல்டு ஆன வீரராக சாமுவேல்ஸ் இருப்பார் என்று நம்பலாம். இரு வீரர்கள் குல்தீப் யாதவ்வை பவுண்டரி அடித்து அடுத்த பந்தில் ஆட்டமிழந்துள்ளனர். 78/3. பிறகு பனிப்பொழிவு வேலையைக் காட்டத் தொடங்கியது.

அப்போது இறங்கினார் ஹெட்மையர், கோலியின் கேப்டன்சிக்கு பெரிய நெருக்கடி ஏற்பட்டது. முதலில் ஜடேஜாவை ஷேய் ஹோப் லாங் ஆன் மேல் சிக்ஸ் அடித்தார். பிறகு குல்தீப் புல்டாஸை ஹெட்மையர் மிட்விக்கெட் மேல் சிக்சருக்கு அனுப்பினார். பிறகு மீண்டும் ஒரு புல்டாஸும் கதியும் மிட்விக்கெட் மேல் சிக்சரானது. பிறகு ஜடேஜாவையும் ஹெட்மையர் மீண்டும் 2 வலுவான சிக்சர்களுக்குப் பறக்கவிட்டார். ஜடேஜா 7 ஓவர்கள் 44 ரன்கள். சாஹலையும் விட்டு வைக்காத ஹெட்மையர் ஸ்கொயர்லெக்கில் ஒரே தூக்குத் தூக்கி சிக்சரில் 41 பந்துகளில் அரைசதம் கண்டார். அதன் பிறகு சாஹலை ஒரு ஓவரில் புரட்டி எடுத்தார் ஹெட்மையர், 26வது ஓவரின் முதல் பந்தை அரக்க மிட்விக்கெட் பவுண்டரி அடித்தார். பிறகு தன் காலின் கீழேயே ஒரு பந்தை சாஹல் குத்த இனி அப்படிப் போடுவாயா என்று மிட்விக்கெட் மேல் பந்து உடைந்து விடும் போல் ஒரு சிக்சரை அடித்தார் ஹெட்மையர், அடுத்த பந்தை அழகாக நடன மேலேறலில் மீண்டும் ஒரு சிக்ஸ். கெய்ல் போல் ஆடினார் நிறுத்த முடியவில்லை, கோலியின் கைகளில் நகத்தையும் தாண்டி சதையும் பற்களில் கடிபடத் தொடங்கின.

ஷேய் ஹோப்பும், ஹெட்மையரும் சேர்ந்து 20 ஓவர்களில் 143 ரன்கள் அதிரடிக் கூட்டணி அமைத்தனர். ஷேய் ஹோ இன்னொரு முனையில் மிகவும் பிரமாதமான கவர் டிரைவ்களுடன் பிரித்து மேய்ந்து கொண்டிருந்தார். மொகமது ஷமியையும் விட்டு வைக்காத ஹெட்மையர் 2 பவுண்டரிகளுடன் 90-களுக்குப் புகுந்தார். 64 பந்துகளில் 4 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 94 ரன் எடுத்த சாஹல் வீசிய ஊர்பட்ட ஷார்ட் பிட்ச் பந்தை கவரில் கோலி கையில் கொடியேற்றி வெளியேறினார், ஆனால் திகைப்பூட்டும் அதிரடி இன்னிங்ஸ், கோலி வெறும் பாடி லாங்குவேஜ்தான் காட்ட முடிந்ததே தவிர கேப்டன்சியில் சாமர்த்தியம் போதவில்லை. ரோவன் போவெல், ஷேய் ஹோப் அவ்வப்போது வரும் பவுண்டரியுடன் திருப்தி அடைய வெற்றிக்கான ரன் விகிதமும் பந்துக்கு ஒரு ரன் என்ற வீதத்தில்தான் இருந்தது. 18 ரன்கள் எடுத்த போவெலுக்கு கோலி ஸ்லிப்பைக் கொண்டு வர கூக்ளியை குல்தீப் வீச ஸ்லிப்பில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் ஆனது.

பிறகு ஜேசன் ஹோல்டர், ஷேய் ஹோப், ஹெட்மையர் வழியில் செல்லாமல் தேவையற்ற எச்சரிக்கையுடன் ஆட வெற்றிக்குத் தேவைப்படும் ரன் விகிதம் எகிறத் தொடங்கியது. ஒரு 8 ஓவர்கள் பவுண்டரியே வரவில்லை. ஷேய் ஹோப் குல்தீப் யாதவ்வை சிக்ஸ் அடித்து வறட்சியிலிருந்து மீட்டார், அதன் பிறகு பவுண்டரிகள் கொஞ்சம் வர ஷேய் ஹோப் சதம் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் 29 பந்துகளில் 34 ரன்கள் தேவை என்ற நிலைக்கு வந்தது. ஹோல்டர் 23 பந்துகள்ல் 12 என்று நம்மூர் தோனி போல் ஆடி சொதப்பியதில் அழுத்தம் அதிகரித்தது, அவர் அடிக்க வேண்டிய நேரத்திலும் மூடிலும் ஹோப்பினால் ரன் அவுட் ஆனார்.

மொகமது ஷமி மிகப்பிரமாதமான 49வது ஓவரை வீச கடைசி ஓவரில் உமேஷ் யாதவ் 13 ரன்களைக் கொடுக்காமல் வீச வேண்டும், கடைசி பந்து பவுண்டரி மூலம் டை ஆனது. ஷேய் ஹோப் 134 பந்துகளில் 10 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 123 நாட் அவுட். மே.இ.தீவுகள் 321/7, ஆட்டம் டை. உமேஷ் யாதவ் 10 ஓவர்கள் 78 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஆட்ட நாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். உண்மையில் கோலியின் 157 ரன்கள், குறிப்பாக கடைசியில் 3 ஓவர்களில் அடித்த 48 ரன்களினாலும், குல்தீப் யாதவ்வின் விக்கெட்டுகளினாலும், ஷமியின் பிரமாதமான 49வது ஓவரினாலும் இந்தியா தோல்வியிலிருந்து கிரேட் எஸ்கேப் ஆனது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x