சிலர் தொடர்ந்து சொதப்பினாலும் தொடர்ந்து சான்ஸ்.. சிலர் ஒரு போட்டியில் சொதப்பினாலும் அவுட்: ஹர்பஜன் வேதனை

சிலர் தொடர்ந்து சொதப்பினாலும் தொடர்ந்து சான்ஸ்.. சிலர் ஒரு போட்டியில் சொதப்பினாலும் அவுட்: ஹர்பஜன் வேதனை
Updated on
2 min read

இந்திய அணித்தேர்வுக்குழுவின் செயல்பாடுகளும், கேப்டன்கள் விளையாடும் லெவனைத் தேர்வு செய்வதிலும் ‘அரசியல்’ இருப்பதான பார்வை வலுவடைந்து வருகிறது.

கேப்டன்கள் இஷ்டத்துக்கு வீரர்களை ட்ராப் செய்வதும் எடுப்பதும் வழக்கமாகி வருவதும் பயிற்சியாளர் என்ற பெயரில் இருக்கும் ரவிசாஸ்திரி கேப்டன்கள் செய்வதற்கு கலப்பற்ற ஆதரவு வழங்கி வருவதும் மற்ற வீரர்களிடையே அதிருப்தியையும் கசப்பையும் ஏற்படுத்தி வருகின்றன.

அணித்தேர்வுகுழுவின் அடிக்கும் லூட்டி அதற்கு மேல், கருண் நாயருக்கு இவர்கள் செய்யும் துரோகம் (ஆம்! வேறு வார்த்தையில்லை) படுமோசமாகச் சென்று கொண்டிருக்கிறது, அவர் மட்டும் ரஞ்சி போட்டிகளில் ரன்களைக் குவித்துக் கொண்டே இருக்க வேண்டுமாம் வாய்ப்பு தானாக வருமாம், தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் கூறுகிறார்.

இந்நிலையில் இதே உணர்வைப் பிரதிபலித்து ஹர்பஜன் சிங் கடுமையாகச் சாடியுள்ளார்:

இந்தப் புரியாத புதிரை யாராவது அவிழ்த்தால் பரவாயில்லை. 3 மாதங்கள் அணியிலேயே எடுக்காமல் உட்கார வைக்கப்படும் ஒரு வீரர் (கருண் நாயர்), எப்படி அணியில் தேர்வு செய்யக்கூட லாயக்கில்லாதவராகி விடுகிறார்? என்னை நம்புங்கள், உண்மையில் எனக்கு இது மிகுந்த வேதனை அளிக்கிறது. அணித்தேர்வுக்குழுவில் என்னதான் நடக்கிறது? என்ன அளவுகோல்கள்?

வெவ்வேறு வீரர்களுக்கு வெவ்வேறு அளவுகோல்களா? ஒருசிலருக்கு அணியில் நிலைபெற போதுமான வாய்ப்புகள் மற்றவர்களில் சிலருக்கு ஓரிரு போட்டிகளில் கூட சரியாமால் ஆட வாய்ப்பு கிடையாது, அதாவது ஓரிரு போட்டிகளில் சொதப்பினாலும் உடனே வெளியே எடு என்கிறார்கள். இது நியாயமா? ஹனுமா விஹாரி மே.இ.தீவுகளுக்கு எதிராக தோல்வியடைந்தால் என்ன ஆவார்? நான் அப்படி நடக்கணும்னு விரும்பவில்லை, ஆனால் உடனே அவரைத் தூக்கி விடுவார்களா என்றே கேட்கிறேன்.

ஹனுமா விஹாரி சரியாக ஆடவில்லை, கருண் நாயரைக் கொண்டு வருவீர்களா, அவர் ஆஸ்திரேலியா தொடருக்கு அதற்குள் தயாராகி விட முடியுமா?

இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் கருண் நாயரை அணிநிர்வாகம் ஆடவைக்கவில்லை எனில் அந்த அணி நிர்வாகம் கருண் நாயருக்கு நம்பிக்கை ஊட்டவில்லை என்றே அர்த்தம்.

கருண் நாயரை இங்கிலாந்து தொடருக்குத் தேர்வு செய்யும் போது கேப்டன் விராட் கோலியின் முழு சம்மதத்தை  அணித்தேர்வாளர்கள் பெற்றனரா என்பதே கேள்வி. அப்படியில்லை எனில் அணி நிர்வாகம் எந்த வீரரை கருத்தில் கொண்டதோ அதை தேர்வுக்குழுவினர் பரிசீலித்தனரா? ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பாக இவையெல்லாம் சரி செய்யப்படுவது அவசியம்.

இவ்வாறு ஹர்பஜன் சின் தீவிர கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in