

தேசிய சீனியர் மகளிர் கால்பந்து போட்டி வரும் 27-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை அசாமில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கவுள்ள 20 பேர் கொண்ட தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தேர்வு முகாம் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் திண்டுக்கல்லில் நடைபெற்றது. அதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 80 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அதிலிருந்து 20 வீராங்கனைகளை எஸ்டிஏடி பயிற்சியாளர் முருகவேந்தன் தேர்வு செய்துள்ளார்.
20 வீராங்கனைகளுக்கும் 10 நாள் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இந்த வீராங்கனைகள் இன்று மாலை சென்னையில் இருந்து அசாமிற்கு புறப்பட்டு செல்கின்றனர். தமிழக அணி டி பிரிவில் இடம்பெற்றுள்ளது. அதே பிரிவில் அசாம், ஜார்க்கண்ட், புதுச்சேரி, உத்தரகண்ட், அருணாசலப் பிரதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
தமிழக அணி வரும் 28-ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் அசாமையும், 30-ம் தேதி ஜார்க்கண்டையும், மே 2-ம் தேதி புதுச்சேரியையும், மே 4-ம் தேதி அருணாசலப் பிரதேசத்தையும், மே 6-ம் தேதி உத்தரகண்டையும் சந்திக்கவுள்ளது.
அணி விவரம்:
கோல் கீப்பர்: எஸ்.பீராங்கிதர் எலிசா, ஆர்.மகேஸ்வரி (இருவரும் சென்னை), பின்களம்: ஜெ.எஸ்.அர்ச்சனா (சென்னை), எஸ்.லட்சுமி (மதுரை), ஏ.இந்திராணி (சென்னை), கே.சத்யா (மதுரை), எம்.லட்சுமி (சென்னை), எம்.கிருத்திகா (திண்டுக்கல்), டி.தவமணி (திருவள்ளூர்), கே.கலைச்செல்வி (சேலம்), நடுகளம்: ஏ.பிரியா (திருச்சி), பி.சத்தீஸ்குமாரி (சென்னை), எம்.கலையரசி (மதுரை), ஆர்.ரஞ்சிதா (சென்னை), எம்.சத்யா (சேலம்), எஸ்.கீதாஞ்சலி (திருவள்ளூர்), பி.சாந்தலட்சுமி (திண்டுக்கல்), முன்களம்: எம்.நந்தினி (சென்னை), ஆர்.சுமித்ரா (சென்னை), ஏ.சிவசங்கரி (நாமக்கல்). பயிற்சியாளர்: அன்பரசன் (திருச்சி), மேலாளர்: பி.சத்தியவாணி (கடலூர்).