4-வது டெஸ்ட் மழையால் பாதிப்பு - இங்கிலாந்து-237/6

4-வது டெஸ்ட் மழையால் பாதிப்பு - இங்கிலாந்து-237/6
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 71 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதைத் தொடர்ந்து ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இங்கிலாந்தின் மான்செஸ்டரில் வியாழக்கிழமை தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி, இங்கிலாந்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 46.4 ஓவர்களில் 152 ரன்களுக்கு சுருண்டது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் தோனி 71 ரன்களும், அஸ்வின் 40 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியில் ராப்சன் 6, கேப்டன் அலாஸ்டர் குக் 17, கேரி பேலன்ஸ் 37 ரன்களில் ஆட்டமிழக்க, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 35 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்திருந்தது. இயான் பெல் 45 ரன்களுடனும், கிறிஸ் ஜோர்டான் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர்.

2-வது நாளான வெள்ளிக்கிழமை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியில் இயான் பெல் 63 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்டார். அந்த அணி 136 ரன்களை எட்டியபோது ஜோர்டானை வீழ்த்தினார் புவனேஸ்வர் குமார். 22 பந்துகளில் 13 ரன்கள் எடுத்த ஜோர்டான், ஆரோனிடம் கேட்ச் ஆனார். அவரைத் தொடர்ந்து இயான் பெல்லையும் வெளியேற்றினார் புவனேஸ்வர் குமார். 82 பந்துகளைச் சந்தித்த அவர் 58 ரன்கள் சேர்த்து தோனியிடம் கேட்ச் ஆனார்.

இதையடுத்து ஜோ ரூட்டுடன் இணைந்தார் மொயீன் அலி. இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 27 பந்துகளில் 13 ரன்கள் எடுத்த மொயீன் அலி, ஆரோன் பந்துவீச்சில் கிளீன் போல்டு ஆனார். இதனால் 170 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இங்கிலாந்து.

இதையடுத்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் களம்புகுந்தார். பட்லரும், ஜோ ரூட்டும் மேலும் விக்கெட் எதுவும் விழாமல் பார்த்துக் கொண்டு நிதானமாக ரன் சேர்த்தனர். இதனால் 61-வது ஓவரில் 200 ரன்களைக் கடந்தது இங்கிலாந்து. அந்த அணி 71 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது.

அப்போது ஜோ ரூட் 94 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 48, ஜோஸ் பட்லர் 53 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் புவனேஸ்வர் குமார், வருண் ஆரோன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in