

விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற இந்திய-மே.இ.தீவுகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி பரபரப்பான ‘டை’யில் முடிந்தது. விராட் கோலியின் அந்த கடைசி ஓவர் அதிரடி இல்லையெனில் நிச்சயம் இந்திய அணி தோற்றிருக்கும்.
78/3 என்ற நிலையில் ஹெட்மையர் (94), ஷேய் ஹோப் (123) இணைந்து 20 ஓவர்க்ளில் 143 ரன்களை அதிரடியாகச் சேர்க்க மே.இ.தீவுகள் தொடர்ந்து வெற்றிக்கான முனைப்பில் இருந்தது, ஆனால் சாஹல் பந்தில் ஹெட்மையர் ஆட்டமிழக்க ஒரு 50 பந்துகள் பவுண்டரியே வராமல் இந்திய அணி வீச வெற்றிக்குத் தேவைப்படும் மே.இ.தீவுகள் அணியின் ரன் விகிதம் எகிறியது. ஹோல்டரை, ஹோப் ரன் அவுட் செய்ததோடு, அல்வா புல்டாஸ்களையெல்லாம் ஹோப் பீல்டர் கையில் அடித்து விரயம் செய்ய கடைசி ஓவரில் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து டை செய்தது மே.இ.தீவுகள்.
இந்த ஆட்டம் குறித்து விராட் கோலி கூறியதாவது:
முதலில், இது ஒரு அபாரமான கிரிக்கெட் ஆட்டம். மைதானம் முழுதும் ரசிகர்கள். மே.இ.தீவுகள் போர்க்குணத்துடன் ஆடியதற்கான பெருமையை அளிக்க வேண்டும். குறிப்பாக 3 விக்கெட் விழுந்த பிறகு சிறப்பாக ஆடினார்கள். ஹெட்மையர், ஹோப் அடித்து ஆடினார்கள்.
என்னுடைய இன்னிங்ஸ் மற்றும் விரைவு 10,000 ரன்கள் எனக்குப் பெருமையளிக்கிறது. அனைவருமே நாம் முதலில் பேட் செய்ய வேண்டும் என்று ஆட்டத்துக்கு முன்னரே முடிவெடுத்து விட்டோம், மேலும் பெரிய போட்டிகளில் உலகக்கோப்பைகளில் ரன்களை அடித்து பிறகு அதைச் சிறப்பாகத் தடுக்க வேண்டும்.
அவர்கள் துரத்தும் போது பிட்ச் வேறுவிதமாக மாறியிருந்தது. நாங்கள் 275-80 ரன்களைத்தான் இலக்காக மனதில் கொண்டிருந்தோம். ஆனால் நான் நன்றாக ஆடிக்கொண்டிருந்தேன், அதனால் அந்தக் கூடுதல் ரன்கள் வந்தன.
இன்றைய போட்டி சவால்தான், ஆனால் அதிர்ஷ்டவசமாக டையில் முடிந்தது. கடைசியில் டை ஆனதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவர்கள் வெற்றிக்கு தேவைப்படும் ரன் விகிதம் 6 ரன்களுக்கும் குறைவாக இருந்த போது அவர்கள் வலுவான நிலையில் இருந்தனர். ஆனால் குல்தீப் ஒரு விக்கெட் எடுத்தார், சாஹல் அபாரமாக வீசினார். உமேஷ், ஷமி பினிஷ் செய்தனர்.
உமேஷ் ஷூவில் பட்டுப்போன ஒரு பவுண்டரி, கடைசியில் ராயுடுவுக்கு 2 அங்குலம் தள்ளி பவுண்டரி சென்ற ஷாட்டினால் டை ஆனது, ஆனால் கிரிக்கெட் என்பது இதுதானே. மே.இ.தீவுகள் அணி ஆடியவிதத்துக்கு அவர்கள் டை செய்ததற்குத் தகுதியான ஆட்டமே இது. ராயுடு தொழில்நேர்த்தியுடன் ஆடுகிறார். நிரந்தர நம்பர் 4 இடம் அவருக்கே. வேகம், ஸ்பின் இரண்டையும் நன்றாக ஆடுகிறார். நல்ல உத்வேகத்தில் இருக்கிறார், நல்ல பார்மில் உள்ளார்.
நான் ஷேய் ஹோப்பை ஹெடிங்லே போட்டியிலிருந்து பார்த்து வருகிறேன், சில கிளாசி இன்னிங்ஸ்களை அவர் ஆடி வருகிறார், ஹெட்மையரும்தான். இருவரும் மிகப்பிரமாதமாக ஆடினர்.