

இங்கிலாந்துக்கு எதிராக 75 பந்துகளில் சதம் எடுத்த சுரேஷ் ரெய்னா அணியின் வெற்றிக்கு ரவி சாஸ்திரி போட்டிக்கு முன்னால் அணியினரிடத்தில் ஏற்படுத்திய தன்னம்பிக்கையே காரணம் என்று கூறியுள்ளார்.
"போட்டிக்கு முன்பாக அணி வீரர்கள் கூட்டத்திற்கு வந்த இயக்குனர் ரவி சாஸ்திரி சிறிய உரையாற்றினார். அது மிகவும் உத்வேகமூட்டுவதாக அமைந்தது. மேலும் ஸ்டேடியத்திற்கு பேருந்தில் வரும்போது அவர் என்னருகில் அமர்ந்திருந்தார். அவர் என்னிடம் ‘தைரியமான ஆட்டத்தை வெளிப்படுத்து’ என்றார்.
மேலும் ஒரு முன்னாள் வீரரிடம் பேசும்போது வித்தியாசமான ஒரு சவுகரியம் ஏற்படுகிறது. மற்ற பயிற்சியாளர்களும் எங்களுக்கு ஆதரவு அளித்தாலும், ரவி சாஸ்திரியிடம் நாம் நம்மை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் வெளிப்படுத்திக் கொள்ள முடிகிறது.
நிச்சயம் அவர் அணி வீரர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுபவராக திகழ்கிறார்.என்னைப் பொறுத்தவரையில் அணிக்கு ஒரு புத்துணர்வு ஊட்ட வேண்டும் என்று நினைத்திருந்தேன், அதை எனது ஆட்டத்தின் மூலம் செய்ய முடிந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தோனியுடன் பேட் செய்வதில் என்ன அனுகூலம் என்றால் அவர் எனது இயற்கையான ஆட்டத்தை கைவிடுமாறு என்றுமே கூறியதில்லை. மேலும் அவர் அடிக்கடி என்னிடம் வந்து பேசி நான் விக்கெட்டை தூக்கி எறியாமல் இருக்க உதவினார்”
இவ்வாறு பிசிசிஐ.டிவி இணையதளத்தில் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.