Published : 30 Aug 2014 10:00 AM
Last Updated : 30 Aug 2014 10:00 AM

வெற்றியைத் தொடரும் முனைப்பில் இந்தியா

இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் நாட்டிங்காம் நகரில் இன்று நடைபெறுகிறது.

முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2-வது ஒருநாள் போட்டியில் 133 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டு வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ள இந்திய அணி, இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று முன்னிலையை அதிகரிக்கும் முனைப்பில் களமிறங்குகிறது. அதேநேரத்தில் சொந்த ஊர் ரசிகர்கள் முன்னிலையில் படுதோல்வி கண்டுள்ள இங்கிலாந்து அணி, மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப முயற்சிக்கும்.

ரோஹித் சர்மா விலகல்

இந்திய அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ரோஹித் சர்மாவின் வலது கை நடுவிரலில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக முரளி விஜய் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

எனினும் முரளி விஜய் இந்தப் போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து செல்லமாட்டார் என்பதால் ஷிகர் தவனுடன் விராட் கோலி அல்லது அஜிங்க்ய ரஹானே தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித்துக்குப் பதிலாக அம்பட்டி ராயுடு இடம்பெறுவார் என தெரிகிறது. கடந்த போட்டியில் அரைசதமடித்து இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்த ரோஹித் சர்மா விலகியிருப்பது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கோலி, தவன் தடுமாற்றம்

ஷிகர் தவன், கோலி ஆகியோர் தொடர்ந்து சொதப்பி வருவது கவலையளிப்பதாக உள்ளது. கடந்த போட்டியில் சதமடித்த சுரேஷ் ரெய்னாவின் அதிரடி, இந்த போட்டியிலும் தொடரும் என நம்பலாம். இதுதவிர கேப்டன் தோனி, அம்பட்டி ராயுடு ஆகியோர் சிறப்பாக ஆடும்பட்சத்தில் இந்தியா வலுவான ஸ்கோரை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேகப்பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார், முகமது சமி, மோஹித் சர்மா ஆகியோருடனும், சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா ஆகியோருடனும் இந்திய அணி களமிறங்கும் என தெரிகிறது. இந்திய அணியில் ரோஹித் சர்மாவைத் தவிர எந்த மாற்றமும் இருக்காது.

நெருக்கடியில் இங்கிலாந்து

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங்கில் அலெக்ஸ் ஹேல்ஸ் மட்டுமே 40 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸை (4 விக்கெட்) தவிர யாரும் ஜொலிக்கவில்லை. உலகக் கோப்பை போட்டிக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் 2-வது போட்டியில் படுதோல்வி கண்டதால் முன்னாள் வீரர்களின் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது இங்கிலாந்து.

அந்த அணியில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இருக்காது என தெரிகிறது. கடந்த போட்டியில் 10 ஓவர்களில் 73 ரன்களை வாரி வழங்கிய கிறிஸ் ஜோர்டானுக்குப் பதிலாக ஸ்டீவன் ஃபின் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

இதே நாட்டிங்காம் மைதானத்தில் இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அதில் இரு அணிகளின் கடைநிலை பேட்ஸ்மேன்கள் ரன் குவித்தனர். அதேபோல் இந்த முறையும் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும்பட்சத்தில் ரசிகர்கள் ரன் மழையில் நனைவார்கள் என நம்பலாம்.

மழை வாய்ப்பு

நாட்டிங்காமில் மழை பெய்வதற்கு 30 சதவீதம் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனினும் போட்டி பெரிய அளவில் பாதிக்கப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை நாட்டிங்காம் டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் 1983 முதல் 2004 வரையிலான காலத்தில் இந்தியா 4 போட்டிகளில் மோதியுள்ளது. அதில் 3-ல் தோல்வி கண்டுள்ளது. இந்தியாவும், இங்கிலாந்தும் இங்கு இரு முறை மோதியுள்ளன. அதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்துள்ளன.

சாம்பியன்ஸ் லீக் ரோஹித் விலகல்?

சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் தகுதிச்சுற்று வரும் செப்டம்பர் 13-ம் தேதி சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் தொடங்குகிறது.

இதில் மும்பை அணியும் பங்கேற்கிறது. ஆனால் அதன் கேப்டன் ரோஹித் சர்மா வுக்கு கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் பங்கேற்கமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவருக்குப் பதிலாக மேற்கிந்தியத் தீவுகள் வீர் கிரண் போலார்ட் கேப்டனாக செயல்படுவார் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x