Published : 07 Oct 2018 02:10 AM
Last Updated : 07 Oct 2018 02:10 AM

புரோ கபடி லீக் 6-வது சீசன் இன்று தொடக்கம்: தமிழ் தலைவாஸ் - பாட்னா அணிகள் மோதல்

புரோ கபடி தொடரின் 6-வது சீசன் ஆட்டங்கள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது. இதில்  12 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இவை  இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் புனேரி பல்தான், ஹரியாணா ஸ்டீலர்ஸ், யு மும்பை, தபாங் டெல்லி, குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் தமிழ் தலைவாஸ், உ.பி.யோதா, பாட்னா பைரட்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.

இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் சென்னை, சோனிபட், புனே, பாட்னா, நொய்டா, மும்பை, அகமதாபாத், டெல்லி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா ஆகிய நகரங்களில் அடுத்தடுத்து நடைபெறுகிறது. சுமார் 3 மாத காலங்கள் நடைபெறும் இந்தத் தொடரின் பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் கொச்சியிலும், இறுதிப்போட்டி மும்பையில் ஜனவரி 5-ந் தேதியும் நடைபெறுகிறது.

இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 3 முறை மோத வேண்டும். அடுத்து எதிர் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். மேலும் எதிர் பிரிவில் உள்ள ஒரு அணியுடன் மட்டும் வைல்டு கார்டு சுற்றில் விளையாட வேண்டும். இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 22 ஆட்டங்களில் விளையாடும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

3 எலிமினேட்டர், 2 தகுதி சுற்று ஆட்டங்களைத் தொடர்ந்து இறுதிப் போட்டி நடைபெறும். லீக் ஆட்டங்களின் முதற்கட்டம் சென்னையில் இன்று தொடங்கி வரும் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் அஜய் தாக்குர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, நடப்பு சாம்பியனான, பாட்னா பைரட்ஸ் அணியுடன் மோதுகிறது. இதையடுத்து இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் புனேரி பால்தான், யு மும்பா அணிகள் மோதுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x