

ஒலிம்பிக்கில் சாதிக்க வேண்டும் என்ற கனவு உள்ளது. ஆனால் அதற்கு பெரிய அளவில் ஸ்பான்சர்களும், தலைசிறந்த பயிற்சியாளரும் உதவ வேண்டும் என இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அபூர்வி சன்டீலா தெரிவித்துள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் சமீபத்தில் முடிவடைந்த காமன்வெல்த் போட்டியில் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் அபூர்வி தங்கப் பதக்கம் வென்றார். இந்த நிலையில் தனது ஒலிம்பிக் கனவு குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
எனது தந்தை குல்தீப் சிங்தான் என்னுடைய அனைத்து செலவுகளையும் கவனித்து வருகிறார். எனக்காக சில லட்சங்கள் செலவு செய்து எங்களுடைய வீட்டில் துப்பாக்கி சுடுதல் தளம் அமைத்திருக்கிறார். இதேபோல் ஒலிம்பிக் கோல்டு கெஸ்ட் அமைப்பின் ஆதரவு சரியான நேரத்தில் கிடைத்திருக்கிறது. ஆனால் இன்னும் கூடுதலாக ஸ்பான்சர் தேவைப்படுகிறது. எனது பயிற்சிக்கு நவீன துப்பாக்கிகளும், கருவிகளும் தேவைப்படுகின்றன. நான் சாதிக்க எனக்கு தலைசிறந்த பயிற்சியாளரும் தேவைப்படுகிறார் என்றார்.
2016-ல் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் சாதிக்க பெரிய அளவில் ஸ்பான்சர்கள் தேவை என குறிப்பிட்ட அபூர்வி, “தேசிய துப்பாக்கி சுடுதல் சங்கத்தின் பயிற்சி முகாமில் இருக்கிறபோது, எனக்கு பயிற்சியாளரும், மற்ற வசதிகளும் கிடைக்கின்றன. ஆனால் வீட்டில் இருக்கிறபோது ராகேஷ் மன்பத் போன்றவர்களிடம் பயிற்சி எடுக்கிறேன்.
ஆனால் பெரிய அளவிலான போட்டிகளில் சாதிப்பதற்கு தலைசிறந்த தனிப் பயிற்சியாளர் தேவை. பொதுவான பயிற்சியாளரிடம் குறைவான நேரம் மட்டுமே பெறும் பயிற்சி பெரிய அளவிலான போட்டிகளில் சாதிப்பதற்கு போதுமானதாக இருக்காது” என்றார்.